கச்சதீவில் சிறிலங்கா கடற்படையினரால் வைக்கப்பட்ட புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் கச்சதீவிற்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.
கச்சதீவிலிருந்து புத்தர் சிலை கடற்படையினரால் அகற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் அறிவித்த நிலையிலேயே அங்கு செல்லவுள்ளதாக அவர் ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறி கச்சதீவில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் தனித்துவத்தை பாதுகாக்குமாறும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் கோரியிருந்தார்.
அதனையடுத்து, கச்சதீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தமக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் யாழ்ப்பாண மாவட்ட செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
அங்கிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்படையினர் கூறியதாக அருட்தந்தை ஜெபரட்ணம் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் ஐ.பி.சி. தமிழ் செய்தி பிரிவு யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணத்துடன் கலந்துரையாடியிருந்தது.
இதன்போது கச்சதீவிற்கு வருகை தந்து புத்தர் சிலை அகற்றப்பட்டதை நேரடியாக பார்வையிடுமாறு சிறிலங்கா கடற்படை யாழ். ஆயர் இல்லத்திற்கு அறிவித்தாக அவர் கூறினார்.
இதனால் உரிய நேரம் கிடைக்கும் போது கச்சதீவிற்கு நேரடியாக சென்று நிலைமைகளை ஆராயவுள்ளதாக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.