அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் இன்றையதினம் வியாழக்கிழமை (30) ஒரு நாள் பயணமாக மன்னார் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மன்னார், தலைமன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட எரிக் சொல்ஹெய்ம் தலைமன்னார் விஜயத்தின் பின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களுடன் மன்னார் ஆயர் இல்லத்தில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மதியம் 3 மணியளவில் மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நினைவு நாள் பேருரை நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
குறித்த நினைவுநாள் நிகழ்வில் எரிக் சொல்ஹெய்ம், மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ, திருகோணமலை ஆயர் கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட அரச திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.