நடிகர் சிம்புவின் நடிப்பில் நாளை வெளியாக உள்ள “பத்து தல” படத்திற்கான சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது நடித்து வெளியாக உள்ள திரைப்படம்தான் ‘பத்து தல’ திரைப்படம். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவாகி இருக்கிறது. இதனாலயே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பத்து தல படத்தின் படப்பிடிப்பானது ஆந்திர மாநிலத்தில் ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து, தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பத்து தல படத்தின் டீஸர், பாடல்கள் , டிரெய்லர் ஆகியவை வெளியான நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் என திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதையடுத்து , பத்து தல படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், படம் ரிலீஸ்க்கு முன்பாக போட்டு காண்பிக்கப்படும் ‘பத்து தல’ படத்தின் சிறப்பு காட்சியினை நேற்று படக்குழுவினருடன் சேர்ந்து நடிகர் சிம்பு கண்டு ரசித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, படம் குறித்த தனது கருத்துக்களை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ள நடிகர் சிம்புவின் வீடியோவை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். அதில் நடிகர் சிம்பு பத்து தல படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்றால், அதற்கு காரணம் நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் ஆதரவு தான். அதை என்றும் நான் மறக்க மாட்டேன். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாளை வெளியாகும் பத்து தல படத்திற்கான நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணி, 5 மணி காட்சிகள் இல்லை என விநியோகஸ்தர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் காட்சியான அதிகாலை 4 மணி காட்சி மற்றும் 5 மணி காட்சி ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பத்து தல படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவே, அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.