// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கைக்குப் பொருந்தாத செயன்முறை குறித்து ஆராய எத்தனை தடவைகள் 'தென்னாபிரிக்க விஜயம்' இடம்பெறும்?

இலங்கைக்குப் பொருந்தாத 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' செயன்முறை குறித்து ஆராய்வதற்காக இதுவரையில் எத்தனை முறை 'தென்னாபிரிக்க விஜயம்' இடம்பெற்றுவிட்டது? என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரியவாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் எனவும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதுடன் நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையகாலங்களில் நாட்டின் உண்மையைக் கண்டறியும் பொறிமுறை அல்லது உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பது குறித்துப் பேசப்பட்டுவருகின்றது. அதன்படி மிகவும் வெற்றிகரமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நடைமுறைப்படுத்திய நாடாகக் கருதப்படும் தென்னாபிரிக்காவின் அனுபவங்களையும், அப்பொறிமுறையுடன் தொடர்புடைய விடயங்களையும் கேட்டறியும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலான பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை தென்னாபிரிக்கா பயணமாகியுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண, 'இலங்கைக்குப் பொருந்தாத செயன்முறை குறித்து ஆராய்வதற்காக இதுவரை எத்தனை முறை 'தென்னாபிரிக்க விஜயம்' இடம்பெற்றிருக்கின்றது? கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கங்களின் பல்வேறு பிரதிநிதிகள் குழுக்கள் இவ்வாறான விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றன' என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி குறைந்தபட்சம் இந்த அமைச்சர்கள் நல்லிணக்கப்பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அறிக்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை வாசிப்பது சிறந்ததாக அமையும் என்றும், இருப்பினும் தற்போது பல்வேறு மாறுதல்கள் (சூழ்நிலையில்) ஏற்பட்டுவிட்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் முன்னர் மிகச்சொற்பளவில் இருந்த நம்பிக்கை தற்போது முழுவதுமாக இல்லாமல் போயிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைக் கோரவில்லை என்றும் த்யாகி ருவன்பத்திரண தெரிவித்துள்ளார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்