சமூக வலைத்தளத்தில் தாய்லாந்து நாட்டின் மன்னராட்சிக்கு எதிராகப் பேசி அவமதித்ததற்காகத் தாய்லாந்து நீதிமன்றம் ஒரு நபருக்கு 28 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது.
கிங்டம்ஸ் லெஸ்-மெஜஸ்டெ (கிரவுனுக்கு எதிரான குற்றம்) சட்டங்கள் மிகக் கடுமையானதாகவே பல நாடுகளில் உள்ளன. தாய்லாந்தில் ராயல் அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவது வழக்கம்.
தாய்லாந்தின் வடக்கு நகரமான சியாங் ராய் நீதிமன்றமானது, ஆன்லைன் ஆடை விற்பனையாளரான மோங்கோல் திரகோட் என்பவர் மீது கிங்டம்ஸ் லெஸ்-மெஜஸ்டெ வழக்குப் பதிவு செய்யப்பட்டு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அவருக்கு முதலில் 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 28 ஆண்டுகளாகத் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மோங்கோல் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த ஆய்வாளர் சுனாய் பாசுக் கூறுகையில், அரச குடும்பத்தின் அவதூறு வழக்குக்காகத் தாய்லாந்து நீதிமன்றம் வழங்கிய இந்த தண்டனை, இரண்டாவது மிக நீண்ட கால சிறைத்தண்டனை என குறிப்பிடுகிறார்.
2021 ஆம் ஆண்டில், தாய்லாந்து மன்னராட்சியை அவமதித்ததற்காக அஞ்சன் என்ற பெண்ணுக்கு 43 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீதிமன்றம் விதித்தது. முன்னதாக அவருக்கு 87 ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்ட நிலையில் 43 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு தற்போது சிறையில் அவர் இருக்கிறார்.
தாய்லாந்து அரச குடும்பத்தை அவதூறு, அவமானங்கள் அல்லது அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் வகையில், குற்றவியல் சட்டத்தின் 112வது பிரிவானது முடியாட்சியின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் வரவிடாமல் பாதுகாக்கிறது.