cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

கடன் மறுசீரமைப்பு குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி மகத்தான வரவேற்பளித்தார்.

மேற்படி உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கொழும்பு, பெஜட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடயங்களுடன், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அதற்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கப்பெற்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் ஆட்சி ஆரம்பிக்கப்பட்ட 1991ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள அதே பொருளாதார நெருக்கடியை இந்தியாவுக்கு சந்திக்க நேரிட்ட போது இந்திய அரசாங்கம் தம்மிடமிருந்த தங்கக் கையிருப்புக்களை அடகு வைத்து அந்நெருக்கடிக்கு தீர்வு கண்டதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர்ந்தார்.

இதனடிப்படையில், இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள நிலைமையை இந்தியா நன்கு புரிந்துகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜெயசங்கர், இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்திய அரசாங்கம் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய வெளிவிவிகார அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது புதிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டப்பட்டதுடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இணையவழியூடாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உயர் பெறுபேற்றைக் கொண்ட சமூக அபிவிருத்தித் திட்டங்களின் வரையறைகளை நீடிப்பது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தமும் இங்கு கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில், இலங்கை தரப்பில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும், இந்திய தரப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழிகாட்டுகிறது.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக மேம்பாட்டு வேலைத் திட்டங்களுடன் தொடர்புடைய இந்த ஒப்பந்தம் 2005 ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்டது.

அதன்படி தனிநபர் வேலைதிட்டத்தின் வரையறை 300 மில்லியன் இலங்கை ரூபாவாக இருந்தது. எனினும் அது இன்று கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 600 மில்லியன் இலங்கை ரூபாவாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி 2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, இந்திய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களால் இலங்கைக்கு வழங்கும் பரிசாக  கண்டிய நடத்துக்கான பயிற்சி நிறுவனமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் வைத்தார்.

கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகை வளாகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி கல்வி நிறுவனத்தை இச்சந்தர்ப்பத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இணையவழியூடாக திறந்து வைத்தார்.

மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இந்நாட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியில் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 300 வீடுகளைக் (காலி, கண்டி, நுவரெலியா- தலா 100 வீடுகள் வீதம்) கையளிக்கும் நிகழ்வும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் இணையவழி தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

60,000 வீடுகளைக் கொண்ட இந்த வேலைதிட்டத்தில் 50,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

பெருந்தோட்டத்தைச் சேர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4000 வீடுகளில் மூன்றாம் கட்டச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம் பணிகள் பூர்த்தியாகியுள்ள 3300 வீடுகள் ஏற்கனவே பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும் இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும்  ‘மாதிரி கிராம வீட்டுத் திட்டம்’ மூலம் அநுராதபுரம் மற்றும் பதுளை மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் அடையாள நிகழ்வும் இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்டது.

             

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்