cw2
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய யாழ்ப்பாணப் பயணத்தின் போது அறவழி எதிர்ப்பில் பங்கெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் இன்று மாலை வேளையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிணையில் வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள் “ இந்த நடவடிக்கை தொடருமாக இருந்தால்,இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை தமிழ் தேசியப் பரப்பிலே இருக்கின்ற அனைவரும் சிந்திக்க வேண்டும் என விநயமாக கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் சிறிலங்கா அதிபர் கலந்துகொண்ட போது நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
வேலன் சுவாமியின் கைது வடக்கின் அறவழிப் போராட்ட வட்டாரங்ளில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் இன்றிரவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவரது விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏசுமந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ், சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி உள்ளிட்டோர் முன்னிலையாகி இருந்தனர்.