cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

யாழில் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு எதிரான கண்டனங்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேசிய தைப்பொங்கல் தினத்தினை கொண்டாடும் முகமாக யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்,மதத்தலைவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது  சிறிலங்கா பொலிஸாரினாலும், விசேட அதிரடி படையினராலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட  கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்தவகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,சிவில் அமைப்புக்கள்,மதத்தலைவர்கள் இணைந்து வெயிட்ட கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ;

பெண்கள், சிறுவர்கள், மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் மீதான சிறிலங்கா ஆயுத படையினரின் வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழர் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில், தேசிய பொங்கல் எனும் பெயரில் சிறிலங்காவின் ஜனாதிபதி ரணில்  தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தில் (15.01.2023) சர்வதேசத்திற்கும், சிங்கள மக்களுக்கும் அரங்கேற்றப்பட்ட நாடகத்தை தோலுரித்துக்காட்டும் விதமாக யாழ் பல்கலைகழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட அமைதிவழி பேரணியில் கலந்துகொண்ட வயோதிபத்தாய்மார்கள், சிறுவர்கள், பெண்கள், மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் மீது சிறிலங்கா பொலிஸாரினாலும், விசேட அதிரடி படையினராலும், இராணுவத்தினராலும், மேற்கொள்ளப்பட்ட வன்முறை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப்பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் மக்கள் ஆகிய நாம் சுதந்திரமாக நடமாட முடியாமலும், எமது அரசியல் நிலைப்பாட்டினை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாமலும் தொடர்ச்சியான அடக்குமுறைக்குள்ளேயே கடந்த பதின்மூன்று வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம். எமது உறவுகளைக் கொன்று குவித்த, காணாமல் ஆக்கிய, எமது நிலங்களை ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்காவின் ஆயுத படையினரும், புலனாய்வாளர்களும் தொடர்ச்சியாக எமது மக்களை அச்சுறுத்தியும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்தும் ஒடுக்கு முறைகளை பிரயோகித்தே வருகின்றனர். ஆனால் தைப்பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் மீது நேரடியாகவே தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவமானது எமது நீண்டகால கோரிக்கைகளான,

1.  சிறிலங்காவின் ஆயுத படையினரை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

2.  தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும். இதில் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும்.

எனும் கோரிக்கைகளினை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.

சிங்கள பேரினவாதம் தொடர்ச்சியாகவே வெளிப்படுத்தும் அதன் கோர முகத்தினையும், குறிப்பாக ரணில் எனும் சிங்கள பேரினவாதியின் உண்மை முகத்தினை சர்வதேசம் புரிந்து கொள்வதுடன், இவ்வடக்குமுறையினை வன்மையாகக் கண்டிப்பதுடன் மீள நிகழாமையை உறுதி செய்ய வேண்டும்.

தொடர்ச்சியாகவே கிழக்கைப் புறந்தள்ளி வடக்கில் மட்டுமே தமிழ் மக்களுக்கு பிரச்சனைகள் உள்ளன என எமது பாரம்பரிய தாயகமான வடகிழக்கைத் துண்டாடுவதிலும், தமிழ் தேசியத்தைச் சிதைப்பதிலும் மும்முரமாகச் செயற்படும் சிறிலங்காவின் ஜனாதிபதி ரணிலின் ராஜதந்திரத்தினை முறியடித்து, எமது தாயக நிலத்தைப் பாதுகாக்க தமிழ்த்தேசியத்தின்பால் பயணிக்கும் அனைவரும் ஓரணியில் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்