// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கஜேந்திரகுமாருக்கு செல்வம் விடுத்துள்ள அழைப்பு

தமிழரசுக் கட்சி வெளியேறினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால் இந்த கூட்டு பலமடைந்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த கூட்டில் இணைய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியை சந்திக்க செல்கின்ற போது நிலங்களை சுவீகரிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, எடுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் செயலை செய்ய வேண்டும் எனக் கோரினோம்.

அதேபோல் அரசியல் கைதிகளின் விடுதலை சம்மந்தமாக பேசியதுடன், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினோம்.

காணாமல் போனோர் சம்மந்தமான பிரச்சினை தொடர்பிலும் பேசினோம்.

இவ்வாறான விடயங்களை உடனடியாக செய்ய வேண்டும் என 31 ஆம் திகதி காலக்கெடு கொடுத்து இருந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.

இவை தொடர்பில் ஒன்றுமே நடைபெறவில்லை. இதனை நாம் ஜனாதிபதிக்கு நேற்று முன்தினம் (10.01.2023) தெரியப்படுத்தினோம்.

18 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் போது நிலம் சம்மந்தமாக தான் சில தீர்மானங்களை எடுப்பதாகக் கூறினார்.

காணி பறிப்பு தொடர்ந்தும் பறிக்கப்படுகின்றது. அரசியல் யாப்பில் உள்ள அதிகார பரவலாக்கல் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே அதிகாரங்கள் ஊடாக எடுக்கப்பட்ட சட்டங்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தோம். அதில் பொலிஸ், நில அதிகாரங்கள் சம்மந்தமாக சில முணு முணுப்புக்களை அங்கு காண முடிந்தது.

எதிர்வரும் 4 ஆம் திகதி தீர்வை வழங்குவதாக சொல்லியிருந்தார். ஆனால் எதுவும் நடைபெறாமல் தொடர்ச்சியாக மேசையில் பேசி போகும் நிலைதான் காணப்படுகின்றது.

ஆகவே, நாங்கள் கூறிய விடயங்களில் எதை செய்யப் போகின்றீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள் அதன் பின் நாம் தொடர்ந்து பேசுவதா, இல்லையா என தீர்மானம் எடுப்போம் எனத் தெரிவித்தோம்.

அரசியல் யாப்பில் உள்ள சட்டங்களை கூட நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் எப்படி இனப் பிரச்சினையை தீர்க்க முடியும். நாங்கள் போயிருக்கா விட்டால் தாம் பல விடயங்களை செய்ய இருந்ததாகவும், நாம் வர வில்லை எனவும் கூறுவார்கள். அதற்காகவே பேச்சுவார்த்தைக்கு சென்றோம்.

அவர்கள் நல்லிணக்க சமிஞ்க்ஞையை காட்ட வேண்டும். எனவே இந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதைப் பொறுத்து தான் அடுத்த பேச்சுக்கு செல்ல முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் எப்படி என்பது உங்களுக்கு தெரியும். இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பில் இணைந்து பயணித்தன.

எங்களைப் பொறுத்தமட்டில் நானும், சித்தார்த்தன் அவர்களும் கட்சி ரீதியாக தமிழரசுக் கட்சிக்கு கடிதம் எழுதினோம். ஏனைய கட்சிகளையும் அரவணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி, அதனூடாக நாங்கள் எல்லோருக்கும் வலுவான ஒற்றுமையாக இருப்பதாக காட்ட முடியும். மக்களது அபிலாசைகளை வென்றெடுக்க முடியும்.

நாங்கள் 6 கட்சிகள் ஐ.நா சபைக்கு கடிதம் எழுதினோம். பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினோம். இதன்போது, எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டதன் காரணமாக ஏனைய தேசிய கட்சிகளையும் உள்ளெடுப்பது சம்மந்தமாக சம்மந்தன் ஐயாவுடனும் பேசினோம். கடிதமும் எழுதினோம். ஆனால் அந்த கடிதத்திற்கான பதில் வருவதற்கு முன்னர் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுகின்ற முடிவை எடுத்திருந்தார்கள்.

அந்தவகையில், நாங்கள் வைத்த கோரிக்கைகு பதில் தராது இந்த முடிவை எடுத்து வெளியில் செல்லும் நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

கூட்டமைப்பில் இருந்து வெளியே சென்ற கட்சிகளில் உள்ளே வர வேண்டும் என கருதிய கட்சிகள் எல்லோரும் அணிதிரண்டுள்ளோம்.

குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் எமது கூட்டில் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றேன்.

தமிழ் மக்களின் பிரச்சினையை வென்றுறெடுப்பதற்கு நாங்கள் பலமான கூட்டாக ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த கூட்டில் வந்து இணைய வேண்டும் என நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே கூட்டு என்பது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் செயற்படும். அதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பங்களிப்பு இருக்கும். தனிப்பட்ட கட்சிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுக் கொடுக்க முடியாது.

மட்டக்களப்பில் நடந்த கூட்டத்தில் தனித்து செல்ல தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது. ஆனால் மட்டக்களப்பு மாவட்ட பத்திரிகையாளர்கள் இந்த கூட்டமைப்பு உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இந்த தேர்தலில் போட்டியிடும். தொடர்ச்சியாக 6 கட்சிகள் ஒற்றுமையாக பயணித்தோம். தேர்தல் தொடர்பில் எங்களது கடிதத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்களது முடிவு கவலையளிக்கிறது. மக்கள் ஒற்றுமையைத் தான் விரும்புகிறார்கள். அவர்கள் தங்களது தனித்துவத்தை காட்ட வேண்டும் என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை.

கூட்டமைபில் இருந்து ஒரு கட்சி விலகிச் சென்றாலும், முன்னர் விலகிச் சென்றவர்கள் உள்ளே வந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் மக்கள் எமக்கு ஆதரவு தருவார்கள். கூட்டமைப்பு சிதைவு பட முடியாது. மக்கள் எமது பக்கம் இருப்பார்கள்.

தற்போது தேர்தல் ஒன்று வந்துள்ளது. தேர்தல் தான் எங்களது குறிக்கோள் அல்ல. இந்த தேர்தல் முடிந்த பின் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட கட்டமைப்பை உருவாகின்ற, தொடர்சியான தலைமைத்துவத்தை கொண்டிருக்கின்ற, மக்களது ஆலோசனைகளைப் பெறுகின்ற செயற்பாடுகளை செய்ய இருகின்றோம்.

தனிப்பட்ட கட்சிகளின் விரும்பு வெறுப்பு இங்கு இருக்காது. இது ஒரு கூட்டு. சுழற்சி முறையில் தலைமைத்துவம் பேணப்படும். நாம் பிளவுபடாமல் மக்களது நம்பிக்கையை வீண்போகாது, மக்களது நலனை முன்னிறுத்தி கட்டுக்கோப்பாக செயற்பட வேண்டும்.

அதற்கு கூட்டமைப்பு பதிவு செய்யப்படும். பொது சின்னம் தெரிவு செய்யப்படும். தற்போது பொது சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்