// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பிரேசிலில் நடப்பது என்ன?

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின் தலைநகரில் கடந்த ஞாயிறன்று நிகழ்ந்த வன்முறை தொடர்பாக முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் லூலா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப்படையினர் தங்கள் கடமையை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தனக்கும் இந்த வன்முறை சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று போல்சனாரோ மறுத்துள்ளார். பிரேசிலில் நடப்பது என்ன?

வன்முறைக்கான பின்னணி என்ன?

பிரேசிலின் முந்தைய அதிபராக இருந்த சயீர் போல்சனாரோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. கொரோனா தொற்றுக்கு எதிராக அவர் தீவிரமாக செயலாற்றவில்லை என்பது பிரதான குற்றச்சாட்டு. கடந்த 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரேசிலில் கொரோனா தொற்று கோரத்தாண்டவமாடி ஏராளமானோர் உயிரிழந்தனர். எனினும், கொரோனாவை வெறும் சாதாரண காய்ச்சல் என்று அதிபர் போல்சனாரோ கூறியிருந்தார்.

இதேபோல், கொரோனா தடுப்பு மருந்துக்கும் எய்ட்ஸ்க்கும் தொடர்பு உள்ளது என்று கூறி அவர் பதிவிட்டிருந்த வீடியோவை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது. இதேபோல், அமேசான் மழைக்காடுகளின் பெரும்பகுதி பிரேசிலில் உள்ள நிலையில், போல்சனாரோவின் ஆட்சிக் காலத்தில் அவை சட்டவிரோத சுரங்கத்திற்காக சுரண்டப்பட்டதாகவும் இதனை அப்போதைய பிரேசில் அரசு கண்டுகொள்ளாமல் விட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அவரது ஆட்சிக்காலத்தில் அமேசான் காடுகள் அதிகம் அழிவை சந்தித்தன.  

அவையெல்லாம் அந்நாட்டு மக்கள் இடையே மிகப்பெரிய வெறுப்பை ஏற்படுத்திய நிலையில்,  கடந்த ஆண்டு நடைபெற்ற பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, வலதுசாரியான சயீர் போல்சனாரோவை தோற்கடித்து ஆட்சியை தன்வசப்படுத்தினார். 

அதிபர் தேர்தலில் லூலா வெற்றி பெற்றது முதல், அவருக்கு எதிராக முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ராணுவ தலையீடு வேண்டும் என்றும் லூலா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறிவரும் அவர்கள், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அதிபர் மாளிகை, உச்சநீதிமன்றம் மற்றும் நாடாளுமன்ற கட்டடங்களின் முன்பாக வலதுசாரி போராட்டகாரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போல்சனாரோவின் ஆதரவாளர்கள் வேண்டுவது என்ன?
தனது ஆட்சிகாலம் முழுவதிலும் பிரேசிலின் அரசு அமைப்புகள் மீது போல்சனாரோ வைத்து வந்தார். உச்ச நீதிமன்றம் தனக்கு எதிராக செயல்படுவதாக கூறினார். வாக்குப்பதிவு முறைகளில் மோசடி செய்யப்படுவதாக கூறினார். எனினும், இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. தற்போது நிகழ்ந்துள்ள வன்முறைகளுக்கு அவர் காரணம் இல்லை என்றாலும் கூட, நிகழ்ந்த சம்பவங்களில் இருந்து அவரை பிரித்து பார்க்க முடியாது. ஏனெனில், போல்சனாரோவின் வார்த்தைகளை அவரது ஆதரவாளர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். 

அக்டோபரில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்ததால்,  போல்சனாரோ மிகவும் அமைதியாகிவிட்டார். அவர் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை - லூலாவிடம் அதிபர் பதவியை ஒப்படைப்பதைத் தவிர்ப்பதற்காக புளோரிடாவுக்குப் பறந்தார் - மேலும், ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்ற தேர்தலில் தாம் அடைந்த தோல்வி குறித்து தனது ஆதரவாளர்கள் கோபம்கொள்ள அவர் அனுமதித்தார். 

மேலும், நாடு முழுவதும் ராணுவ தலைமை அலுவலகங்கள் முன்பு கூடாரங்கள் அமைத்த போல்சனாரோ ஆதரவாளரகள், ராணுவ தலையீடுக்கு அழைப்பு விடுத்தனர்.  கடந்த டிசம்பர் மாதத்தில் பிரேசிலியாவில் உள்ள காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதேபோல் லூலாவின் பதவியேற்பின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக போல்சனாரோ ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

2017ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவத்த லூலாவை அதிபராக ஏற்க மாட்டோம் என்றும் அவர் இருக்கவேண்டிய இடம் சிறையே தவிர அதிபர் மாளிகை அல்ல என்றும் போல்சனாரோ ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். கியூபா அல்லது வெனிசூலாவில் உள்ளதை போன்ற ஆட்சியை அமைக்க அவர் முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். 

தலைநகர் பிரேசிலியாவின் நடந்தது என்ன?
தேர்தல் முடிந்ததும் போல்சனாரோவின் தோல்வியை ஏற்க மறுத்த அவரது ஆதரவாளர்கள், பிரேசிலியாவில் உள்ள ராணுவ முகாம் முன்பு ஆயிரக்கணக்கில் கூடினர். இவர்கள் பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனர். இந்த எதிர்ப்பாளர்களை அகற்றுமாறு உள்ளூர் பாதுகாப்புப் படைகளுக்கு அதிபர் லூலா உத்தரவிட்டார், ஆனால் போலீசார் பலத்தை பயன்படுத்த விரும்பவில்லை. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போல்சனாரோவின் ஆதரவாளர்கள் காவலர்கள் புடைசூழ பேரணியை தொடங்கினர்.  3 மணியளவில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை தகர்த்துவிட்டு நாடாளுமன்றத்தினுள் நுழைந்தனர். சிலர் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அங்கிருந்த கலைபொருட்கள், மரச்சாமான்களை சேதப்படுத்தினர். உச்ச நீதிமன்றத்தின் கண்ணாடிகளைகளை அவர்கள் அடித்து நொறுக்கினர். 

பிரேசில் தேசிய கால்பந்து அணியின் மஞ்சள் நிற டி ஷர்ட்டை அணிந்திருந்த போராட்டக்காரர்கள் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களின் பிரதானமான ஆயுதமாக கற்கள் இருந்துள்ளன. போராட்டகாரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து உச்சநீதிமன்றம், அதிபர் மாளிகை உள்ளிட்ட இடங்கள் ஞாயிறு மாலையன்று மீட்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் அரசு கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதும் பிபிசி ஆய்வில் தெரியவந்துள்ளது. 

வன்முறையை தொடர்ந்து 40 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பேருந்தில் துப்பாக்கி இருந்ததாகவும் பிரேசிலின் நீதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஃபிளேவியோ டினோ,  செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார். மேலும் நேற்று 209 பேரும் இன்று 1200 பேரும் என  கிட்டத்தட்ட 1500 பேர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காவலர்கள் போராட்டத்தை தடுக்க தவறியது எப்படி?
தலைநகர் பிரேசிலியாவில் நிகழ்ந்த வன்முறையை தடுக்க பாதுகாப்பு படையினர் போதிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று அதிபர் லூலா குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் முடிந்ததும் போல்சனாரோவின் தோல்வியை ஏற்க மறுத்த அவரது ஆதரவாளர்கள், பிரேசிலியாவில் உள்ள ராணுவ முகாம் முன்பு ஆயிரக்கணக்கில் கூடினர். இவர்கள் பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனர். இந்த எதிர்ப்பாளர்களை அகற்றுமாறு உள்ளூர் பாதுகாப்புப் படைகளுக்கு அதிபர் லூலா உத்தரவிட்டார், ஆனால் போலீசார் பலத்தை பயன்படுத்த விரும்பவில்லை.

போராட்டக்காரர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக அரசு கட்டிடங்களை நோக்கி பேரணி வந்துள்ளனர். எனினும் அவர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்படவில்லை.  ஞாயிறன்று நடைபெற்ற போராட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டதா என்று பிபிசி தரப்பில் தொடர்புகொண்டு கேட்டோம். இதுவரை எந்த பதிலும் நமக்கு கிடைக்கவில்லை .  மேலும், போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, காவலர்கள் சிலர் போராட்டக்காரகளுடன் புகைப்படம் எடுத்துகொண்ட இரு வீடியோக்களையும் பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.  மற்றொரு வீடியோவில் காவலர் ஒருவர் போராட்டக்காரர்களால் தள்ளிவிடப்படுவது பதிவாகியுள்ளது. 

போராட்டக்காரர்கள் கீழ் தளத்தின் வழியாக நாடாளுமன்ற மேல் தளத்திற்குள் நுழையும்போது காவலர்கள் அமைதியாக நிற்கும் வீடியோவையும் பிபிசி உறுதி செய்துள்ளது.  பாதுகாப்பு கவசங்களை கையில் வைத்திருந்த அவர்கள், பிரதான வாயிலை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். 

ஒரு காவலர் போராட்டக்காரர்களை கை அசைத்து அவர்களுக்கு கைவிரல் காட்டுகிறார். கூட்டம் கட்டடத்திற்குள் முன்னேறும்போது, அவர்களில் சிலர் பாதுகாப்புப் பணியாளர்களைப் பாராட்டினர்.


மருத்துவமனையில் போல்சனாரோ

பிரேசிலில் வரலாற்றில் ஒரு வடுவாக மாறியுள்ள இந்த தாக்குதலுக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று முன்னாள் அதிபர் போல்சனாரோ அறிவித்திருந்தார். அமைதியான ஆர்ப்பாட்டங்கள் தான் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் டுவிட்டரில் கூறியுள்ளார். சட்டங்கள், ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும்  புனிதமான சுதந்திரம் என நமது அரசியலமைப்பின் நான்கு கோடுகளையும் மதித்து பாதுகாத்து வருவதாகவும் தனது டிவிட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக தனது கணவர் கண்காணிப்பில் இருப்பதாக மிச்செல் போல்சனாரோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கடந்த 2018 இல் பிரச்சாரத்தின்போது போல்சனாரோ கத்தியால் குத்தப்பட்டார், பின்னர் அவ்வப்போது வயிற்று வலியுடன் அவர் அவதிப்பட்டு வருகிறார்.  கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே அவர் பிரேசிலில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது நிலை கவலைப்படும் அளவுக்கு இல்லை என அவரது குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாக ராய்டர்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

பிரேசிலின் தற்போதைய சூழல் என்ன?
இந்த வன்முறையை தீவிரவாத தாக்குதல் என்று விமர்சித்துள்ள அதிபர் லூலா நாடாளுமன்றத்தில் நுழைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றூ எச்சரித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை, நாடாளுமன்றம், அதிபர்  மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றம் சூறையாடப்பட்டதை அடுத்து, முன்னாள் அதிபர் சயீர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேசிலியாவின் ராணுவ தலைமையிடங்கள் முன்பு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்களை பாதுகாப்புப் படையினர் அகற்றி வருகின்றனர். வலதுசாரி ஆதரவாளர்களின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக  ஸா பாலோவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். போல்சனாரோ சிறைக்கு செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர். நீதி வேண்டி ஆடல், பாடல் ஆகியவற்றுடன் கூடிய போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்