cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

ஆளுநரின் அழைப்பை புறந்தள்ளிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்

யாழ். மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் தாம் பங்குபற்றும் எண்ணத்தில் இல்லை என்று தமிழித் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்களிப்பின் போது பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தோற்றகடிக்கப்பட்டதை அடுத்து, மாநகர முதல்வர் - சட்டத்தரணி மணிவண்ணன் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்திருந்தார். 

இதனையடுத்து யாழ். மாநகர சபையில் இக்கட்டான நிலையொன்று தோன்றியிருந்தது. இந்நிலையில், மாநகர சபைக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வது தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் சட்டமா அதிபரின் ஆலோசனையும் கோரபட்டுள்ள அதே நேரம் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்றால் நீதிமன்றத்தை நாடி அதனைத் தடுப்போம் என்று முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உறுப்பினர்களிடையே சமரச முயற்சியொன்றை மேற்கொண்டு, சபையின் எஞ்சிய காலத்தைக் கொண்டு நடத்தத் தக்கதான திட்டமொன்றினை முன்வைப்பதற்கு ஆளுநர் திட்டமிட்டிருப்பதனால், முன்னாள் முதல்வரின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்காமல், மீண்டும் சமரசத்துக்கு முனையும் ஆளுநரின் போக்குக்குச் சம்மதிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், 

ஜனநாயக முறையில் - மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை ஒன்றைக் கலைக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு இல்லை. 

குறித்த சபை மீது அல்லது அதன் தவிசாளர் மீது முறைகேடு அல்லது மோசடிக்காக ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெற்று அந்த விசாரணைகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சபையைக் கலைக்கும் அதிகாரம் உள்ளூராட்சி அமைச்சருக்கு உண்டு.

பாதீடு மீதான வாக்கெடுப்பு இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டால் தவிசாளர் பதவி விலகியதாகக் கருதப்பட்டு புதிய முதல்வரைத் தெரிவு செய்யும் பொறுப்பு உள்ளூராட்சி ஆணையாளருக்கு உண்டு. 

யாழ். மாநகர சபை விடயத்தில் தன்னால் சபையைக் கொண்டு நடாத்த முடியாத நிலையில் - தன் இயலாமை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகி - சட்டத்தைச் சவாலுக்குட்படுத்தும் ஒருவருக்காக, உள்ளூராட்சி சபைகள் கட்டளைச் சட்டத்துக்குப் புறம்பாக முதல்வர் தேர்தலை நடாத்தாமல் இருப்பது ஜனநாயக உரிமை மீறலாகும். 

அதை விட அத்தகையதொரு முதல்வரோடு சமரசம் பேசச் செய்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எம்மை அழைத்து சமரசம் செய்ய முனையும் ஆளுநரின் முயற்சிக்கு நாம் துணைபோகத் தயாரில்லை என்றும்,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை இது குறித்து எமக்கு எந்த விதமான அறிவுறுத்தலையும் இதுவரை வழங்கவில்லை. 

கட்சித் தலைமையின் முடிவுக்கமைய நாம் நடந்து கொள்வோம். ஆயினும் கட்சித் தலைமை ஆளுநர் அலுவலகக் கூட்டத்துக்குச் செல்லுமாறு பணிக்காமல் நாம் ஆளுநரின் செயலாளரினால் அழைக்கப்பட்ட கூட்டத்துக்குச் செல்ல மாட்டோம் என்று தெரிவித்தனர்.   


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்