day, 00 month 0000

மாவீரர் துயிலுமில்லங்களை ஆக்கிரமிப்பதை அரசாங்கம் கைவிடும் வரை தமிழ் கட்சிகள் பேச்சுக்கு செல்லக்கூடாது

மாவீரர் துயிலுமில்லங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிடும் வரையில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு செல்வதில்லையென்ற தீர்மானத்தை தமிழ் கட்சிகள் எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு தலைவர் லவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு அவர்களுடன் பேசுவதாக நாடகமாடுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனவும் அக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எதிர்வரும் 04ஆம் திகதி தரவை மாவீரர் துயிலுமில்லத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துயிலுமில்லத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு அனைத்து தமிழ் தேசிய ஆதரவாளர்களும் ஆதரவு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த லவக்குமார்,

கடந்த 30 திகதி மட்டக்களப்பு தரவை மாவீரர்  துயிலும் இல்லப் பகுதியில் 500 க்கு மேற்பட்ட குழிகளை வெட்டி மரக்கன்றுகளை நாட்டுவதாகவும் அதனை  வனவள திணைக்களத்தினால்  செய்யப்படுவதாக மாவீரர் எற்பாட்டுக குழுவான எனக்கும் நிதர்ஷன் ஆகியோருக்கு தொலைபேசி ஊடாக தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக வனவள திணைக்கள காரியாயத்திற்கு சென்றபோது அதனை நாங்கள் வெட்டவில்லை என்றனர்.  இதனையடுத்து  நாங்கள் அங்கு உடனடியாக சென்றபோது இராணுவ புலனாய்வுபிரிவினரும் ஒட்டுக்குழுக்களும் மற்றும்  பிள்ளையான் கடசியில் செயற்பாட்டில் இயங்குகின்ற கூளாவடியைச் சோந்தவர் இணைந்து இந்த குழிகளை வெட்டிக் கொண்டிருந்தனர். நாங்கள் அதனை தடுத்து நிறுத்தினோம் அதன் பின்னர் 30 திகதி இரவு மீண்டும் குழிகள் வெட்டப்பட்டு மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளது.

தரவை மாவீரர்  துயிலும் இல்லம் மிகவும் முக்கியமானது இந்த இடத்தில் இவ்வாறான ஈனச்செயல்களை கடந்த காலங்களிலே செய்து கொண்டுவந்தார்கள் அப்போது இதனை யார் செய்து கொண்டுவந்தார்கள் என்ற அறியமுடியாத சூழல் இருந்தது ஆனால் இப்போது வெளிப்படையாக அப்பட்டமாக தெரியவந்துள்ளது இராணுவபுலனாய்வும், இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் சோந்த இந்த இதனை செய்கின்றனர் என்பது அம்பலமாகியுள்ளது.

இவ்வண்ணமாக செய்திகள் வருகின்றபோது மாற்று கட்சிகள் தடுத்து நிறுத்தியதாக ஊடகங்கள் ஊடாக புலனாய்வு பிரிவினர் செயற்பட்டு அந்த செய்திகளை பெய்யான விதத்தில் பரப்பியிருந்தனர் அதனை செய்த ஊடகங்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஜனாதிபதி ரணில் எதிர்வருகின்ற சுதந்திர தினத்துக்கு முன்பதாக தமிழர்களுக்கு தீர்வுதருவேன் என் அங்கு பேச்சுக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு இங்கு ஆயிரக்கணக்கான எமது புனிதர்களான மாவீரர்கள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை சூறையாடுகின்ற வேலைத்திட்டத்தை மறைமுகமாக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றார்.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய பரப்பிலே பயணிக்கின்ற கட்சிகள், உணர்வாளர்கள் தமிழ் தேசத்தில் மண்பற்றுள்ள அனைவரும் ஒன்று கூடவேண்டும் ஏனென்றால் இவ்வாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈனச்செயல்கள் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் தமிழ் தேசிய கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு போவார்களாக இருந்தால் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.

அதேவேளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தீர்வு கிடைத்தால்தான் பேச்சுக்கு வருவோம் அல்லது வரமாட்டோம் என பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறவேண்டும் இதனை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.  இது எங்கள் புனித மண் தமிழர்கள் வாழுகின்ற பூமி அந்த பூமியை மீட்டெக்க வேண்டிய கட்டாய கடமைகளும் பொறுப்பும் உத்தரவாதமும்; எங்களுக்கு இருக்கின்றது. எனவே மாவீரர் துயிலும் இல்லத்தை மீட்பதற்கான போராட்டம் எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை 10 மணிக்கு மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெறும்.

இந்த போராட்டத்தில்  தமிழ்தேசிய கட்சிகள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், மண்பற்றாளர்கள் சிவில் சமூகங்கள், மதகுருமார்கள், புத்திஜீவிகள், மாவீரர் குடும்பம் பெற்றார்கள், அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்