day, 00 month 0000

வீடியோ கேம் பிறந்ததில் உறைந்திருக்கும் வலி

இன்று கூகுள் தேடுபொறி நாடுவோரை, கொஞ்ச நேரம் வீடியோ கேம் விளையாடிச் செல்லலாமே என செல்லமாய் தூண்டில் போடுகிறது கூகுள் டூடுல். அதற்கு இணங்குபவர்கள் அநேகமாக 90களில் குழந்தை பிராயத்தை கடந்தவர்களாக இருப்பார்கள். தற்போது வழக்கில் இல்லாத அந்த வீடியோ கேம்ஸ் ரகங்களை, கூகுள் தனது ஹோம் பேஜில் அடுத்தடுத்து அலங்கரிப்பதன் பின்னணியில் அவற்றை உலகுக்கு தந்த ஜெரால்ட் ஜெர்ரி இருக்கிறார்.

அமெரிக்காவில் அடக்குமுறைக்கு ஆளான கறுப்பினத்தில் பிறந்து தனது தொலைநோக்குப் பார்வையால் அடுத்த தலைமுறைக்கான அறிவியலை கண்டடைந்தவர் ஜெரால்ட் ஜெர்ரி லாசன். நவீன வீடியோ கேம்ஸின் முன்னோடியாக கொண்டாடப்படும் இவரின் 82வது பிறந்த நாளை டூடுல் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது கூகுள்.

தற்காலத்திய குழந்தைகள் அலைபேசி, கம்ப்யூட்டர், ஸ்மார்ட் டிவி, பிரத்யேக எக்ஸ் பாக்ஸ் என மேம்பட்ட வீடியோ கேம்ஸ் ரகங்களை விளையாடி மகிழ்கிறார்கள். முந்தைய தலைமுறையின் வீடியோ கேம் என்பது பல்வேறு விளையாட்டுகள் பொதிந்த கேட்ரிஜ்களை கட்டிக்கொண்டு அலைந்த அனுபவத்திற்கு உரியது. வீடியோ கேம்ஸ் என்ற சொல்லாடல் பிறப்பதற்கு காரணமான அடிப்படைகளை உருவாக்கியவர் ஜெரால்ட் ஜெர்ரி.

கூகுள் டூடுல்

இனவெறி செழித்திருந்த காலத்தில் அமெரிக்காவின் புளோரிடாவில் இதே நாளில்(1940, நவ.1) கறுப்பின வாரிசாக பிறந்தார் ஜெரால்ட் ஜெர்ரி லாசன். சிறு வயதில் வீட்டிலிருக்கும் உபகரணங்களை பிரித்துப்போட்டு, மீண்டும் அவற்றை பழையபடி பூட்டி ஆச்சரியம் தந்தார். சற்று வளர்ந்ததும் பக்கத்து வீடுகளின் டிவி பெட்டிகளை இலவசமாக பழுது நீக்கி மகிழ்வித்தார். அப்படி பழுது பார்க்கும்போது கிடைக்கும் வீணான உபகரணங்களைக் கொண்டே சொந்தமாக ஒரு அமெச்சூர் வானொலி சேவையை உருவாக்கினார். கறுப்பின குழந்தைகள் பொதுவெளியில் நிராகரிப்புக்கு ஆளான சூழலில் வீடடைந்து கிடந்ததே ஜெரால்டின் விஞ்ஞான ஆர்வத்துக்கு வித்திட்டது என்று சொல்வோரும் உண்டு.

அக்காலத்திய கறுப்பின குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்துக்கு தூண்டுகோலாக இருந்த, ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற வேளாண் விஞ்ஞானியால் ஈர்க்கப்பட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தார் ஜெரால்ட் ஜெர்ரி. நியூயார்க்கின் குயின்ஸ் கல்லூரியில் சேர்ந்தவர், கலிஃபோர்னியாவில் மேல்படிப்புக்காக சென்றபோது அப்போதைய எலக்ட்ரானிக்ஸ் எழுச்சியான செமிகண்டக்டர் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். ’ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர்’ என்ற நிறுவனத்தில் சேர்ந்து அதன் வளர்ச்சிக்கு உழைத்தவர், அப்படியே வீடியோ கேம்ஸின் ஆதி வடிவத்தையும் சித்தரித்தார்.

இவர் தலைமையிலான குழுவே உலகின் முதல் வீடியோ கேம் ரகங்களில் முதன்மையானதை உருவாக்கியது. பின்னர் வீடியோ சாஃப்ட் என்ற நிறுவனத்தை 1980ல் உருவாக்கியவர், அதன் பின்னரான வீடியோ கேம் துறைக்கு அச்சாணியானார். எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்னபிற அறிவியல் துறைகளில் கறுப்பின மாணவர்கள் காலடி வைப்பதற்கும் ஜெரால்ட் உத்வேகமானார். 2011ஆம் ஆண்டில் சர்வதேச விளையாட்டு சங்கத்தினர் ஜெரால்ட் ஜெர்ரியை நவீன வீடியோ கேமின் முன்னோடியாக அங்கீகரித்தனர். வணிக பயன்பாட்டிலுள்ள வீடியோ கேம்ஸின் தந்தையாகவும் ஜெரால்ட் ஜெர்ரி சிறப்பிக்கப்படுகிறார்.

ஜெரால்ட் ஜெர்ரி லாசன்

தற்போதைய வீடியோ கேம்ஸ் என்பது பப்ஜி போன்று பயனர்களை அடிமையாக்கும் வகையிலும், சூதாட்ட வடிவங்களில் உயிர் குடிப்பவையாகவும், பாலியல் இச்சைகளை தீர்ப்பவையாகவும் பல்வேறு திசைகளில் திரிந்திருக்கின்றன. மேலும் விர்ச்சுவல் ரியாலிட்டி, மெட்டாவெர்ஸ் என இணையான பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கும் அசுர மாற்றங்களுக்கும் ஆளாகி வருகின்றன.

அவற்றில் சஞ்சரிக்கும் நவீன தலைமுறையினருக்கு இன்றைய கூகுள் டூடுல் வேடிக்கையாக காட்சியளிக்கலாம். ஆனால் அந்த வீடியோ கேம் உருவாக்கத்தின் பின்னணியில் ஒரு கறுப்பின குழந்தை எதிர்கொண்ட நிராகரிப்பின் வலியை அவர்களால் உள்வாங்குவது கடினம். விளையாட்டு என்பதன் பின்னணி வெறும் விளையாட்டல்ல என்பதையும் இன்றைய கூகுள் டூடுல் உணர்த்தும்


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்