day, 00 month 0000

என் கணவரின் உடலை என்னிடம் ஒப்படையுங்கள்- வியட்நாமில் உயிரிழந்த யாழ் இளைஞனின் மனைவி உருக்கம்

கனடாவுக்கு செல்லும் நோக்கில் பிலிப்பைன்ஸ்  கடலில் கப்பலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த கிரிதரனின் மனைவி சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

"எனது கணவர் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று கூறி கடந்த ஆவணி மாதம் வெளிநாட்டு கடல் பயணத்தினை மேற்கொண்டிருந்தார். அங்கு போன பின்பு தான் இப்படி கப்பலில் போக போகிறேன் என்று கூறினார். எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை ,என்னை குழப்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

அவர் அவ்வாறு கூறியதும் கடல் பயணம் வேண்டாம் திரும்ப இலங்கைக்கு வருமாறு நான் கூறினேன். ஆனால் அவர் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று கூறினார். சென்ற திங்கட்கிழமை வியட்நாம் முகாமிலிருந்து என்னிடமிருந்து ஆவணங்களை பெற்றிருந்தார்கள். என்ன நடந்தது என்றும்,கணவர் இறந்து விட்டார் என்ற செய்தியையும் கூறாமல்  வாங்கியிருந்தார்கள் .

நேற்றைய தினம்  வெளிநாட்டு தூதகரத்தில் இருந்து எனது கணவர் உயிரிழந்து விட்டார் என அறிவித்தனர். நான்கு பிள்ளைகளையும் தவிக்க விட்டு எனது கணவர் இவ்வாறு செய்ய மாட்டார். யாராயினும் எனக்கு ஆதரவு தாருங்கள் .அவரின் இறப்பினை உறுதி செய்யும் வரையில் எங்களுக்கு இதே கதி தான்.

என்னைப்போல் புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களுக்கும் ,உலகளாவிய ரீதியில் நான் தெரியப்படுத்துவது என்னவெனில் எனக்கு நான்கு பிள்ளைகள் ,அவர்களுக்கு அப்பா இல்லை என்று உறுதிப்படுத்துவதற்கு கணவரின் உடலை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்படியாக உங்களை கேட்டுக்கொள்கிறேன்.இந்த உதவியை மாத்திரம் எனக்கு செய்யுங்கள் ,எனக்கு எனது கணவரின் உடல் வேண்டும் ,நான் வேறெதுவும் கேட்கவில்லை.

எனது கணவர் இறந்து விட்டார் என்பது தான் எனக்கு தெரியும் ,அவரின் உடல் எந்த சூழ்நிலையில் இருக்கிறது என்று எனக்கு தெரியாது,இவ்வாறு வியட்னாம் சென்றவர்களை நினைத்து என்னைப்போல் நிம்மதி குலைந்து இருக்கும் மக்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அதாவது நீங்கள் வரும் போது எனக்கு கணவர் இல்லை என என் பிள்ளைகளுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ,இதைவிட எனக்கு கதைப்பதற்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்