அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் மற்றுமொரு போராட்டத்தை நடாத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உரிய அனுமதிகளை பெற்று போராட்டத்தை நடத்துவதற்கு தான் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.
எனினும், அனுமதியின்றி, வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களை நடத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என கூறிய அவர், அவ்வாறான போராட்டங்களை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தை ஈடுபடுத்தி, அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியேனும், போராட்டங்களை தடுத்து நிறுத்துவதாக அவர் கூறுகின்றார்.
போராட்டத்தின் போது, வீடுகளை தீ வைக்க எந்த ஊடகம் முயற்சித்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு தான் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
இதேவேளை, தேர்தலை நடத்தும் நோக்கில் பாராளுமன்றத்தை ஒருபோதும் கலைக்க போவதில்லை என ஜனாதிபதி மேலும் கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினை காணப்படுகின்ற இந்த தருணத்தில், பாராளுமன்றம் கலைக்கப்படாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.