cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

மாவீரர் நாள் தேசிய எழுச்சியாக நடைபெறும்! வேலன் சுவாமிகள்

எங்களது இனத்தின் தேச விடுதலைக்காக தங்களது இன்னுயிரை ஆகுதியாக்கிய அத்தனை மாவீரர் செல்வங்களையும் இங்கே விதைத்து அவர்களது கல்லறை கற்களை வழிபடுகின்ற தழிழருடைய வழிபாட்டிலே அவர்களுடைய தியாகங்களை மதிக்கின்ற போற்றுகின்ற வரலாற்றை சிங்கள பௌத்த பேரினவாத அரசு அழித்து ஒழித்திருக்கிறது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவினர் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அவ்விடத்திற்கு நேற்று மாலை நேரில் சென்று துயிலும் இல்ல பிரதேசத்தினை சுற்றி பார்வையிட்டு அங்கிருந்த கல்லறைகள் அழிக்கப்பட்டிருந்ததை கண்டு கவலையுற்று அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தெரிவித்ததாவது,

தமிழீழத்திலே இருக்கின்ற அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையும் இடித்து, நொறுக்கி எங்களது உறவுகள், தங்களது உறவுகளை நினைந்து நினைவேந்தல்களைக் கூட செய்யமுடியாதவாறு வரலாறு முழுமையாக அழித்திருக்கக் கூடிய விடயமானது எங்களது நெஞ்சுக்கு மேலே ஏறி நின்று எங்களை அழித்ததிற்கு ஒப்பானதாக இருக்கிறது.

பல ஆயிரக்கணக்கான மாவீரர் செல்வங்களுடைய வித்துடல்களை தாங்கி நிற்கின்ற தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்கும்போது இருக்கின்ற உணர்வு வார்த்தைகளாலே வெளிப்படுத்த முடியாது. 

அப்படியான சூழ்நிலையிலேயே தரவை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானப் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பெற்றோர்கள் எந்தவித கட்சி அரசியல் கலப்பும் இல்லாமல் செய்து வருகின்றனர்.

தமிழீழம் எங்கும் இருக்கக் கூடிய அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் ஏற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவீரர்களுடைய பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரும் இந்த மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணிகளை மேற்கொண்டு எதிர்வரும் கார்த்திகை 27 ல் மாவீரர் நாளை அனுஷ்டிக்க இருக்கின்றார்கள்.

இந்த சந்தர்ப்பத்திலே அரசியல் கட்சிகள் தங்களுடைய கட்சி அரசியலுக்காக இந்த மாவீரர் செல்வங்களுடைய  தியாகங்களை பயன்படுத்தவேண்டாம் என்று அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம். மாவீரர்களது பெற்றோர்கள் பொதுமக்களுக்கு வழிவிட்டு அவர்கள் இந்த ஏற்பாடுகளை சிறப்பாக செய்யும் பொருட்டு அது சிறப்பாக அமையும் என்ற அடிப்படையிலேயே எதிர்வரும் 27லே இங்கு மாவீரர் நினைவு நாள் இடம்பெறவுள்ளது.

நீண்ட கால இடைவெளியின் பின்னர் மீண்டும் இம்முறை தமிழீழமெங்கும் மாவீரர் நாள் மிகவும் தேசிய எழுச்சியாக அனைத்து துயிலும் இல்லங்களிலும் நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் அனைவரும் வந்து வழிபாடுகளை ஆற்றவேண்டும். வீரமரவர்களுக்கு எங்களுடைய வீர வணக்கத்தினை செலுத்த வேண்டும்.

அவர்களுடைய தியாகங்கள் எந்த இலட்சியத்திற்காக நடைபெற்றதோ அதே இலட்சியத்திலே எந்த வித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் தமிழர்களுக்கென்று ஒரு தனியான ஒரு தேசம் அமைய வேண்டும், சுயநிர்ணய உரிமையோடு வாழ வேண்டும் என்ற அதே இலட்சியத்திலே நாம் அனைவரும் பயணிக்கவேண்டும், தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.- என்றார்


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்