day, 00 month 0000

தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்குவோம்; அரசுக்கு சஜித் எச்சரிக்கை

இந்த முட்டாள்தனமான அரசு நாட்டை அழித்து வருகின்றது. இந்த அரசு தேர்தலுக்கு முற்றாக அஞ்சுகின்றது. தேர்தலைப் பிற்போடவே முயற்சிக்கின்றது. தேர்தல் ஒன்று இல்லாமல் முன்னேற்றம் ஒன்று இல்லை. எனவே, அரசு தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அதற்காகப் போராடுவோம்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உடுதும்பர தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று (10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அன்று வரிசையில் நின்று மக்கள் செத்து மடியும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு,உரமின்றி விவசாயிகள் பெருமூச்சு விடும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு,எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து உயிர் இழந்தது போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு, இன்று புலம்பிய வன்னம் கதறி அழுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அமைதியான போராட்டங்களைக் கண்டும் அரசாங்கம் அச்சமடைகின்றது. காலிமுகத்திடல் வளாகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நேற்று (நேற்றுமுன்தினம்) அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டதும் இதன் பிரகாரமே.

தாயும் மகனும் கைகோர்த்து நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டத்தைக்கூட அரசால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மகனிடமிருந்து தாயைப் பறித்துச் சென்று ஜீப்பில் ஏற்றிச் செல்லும் காட்சிகளைக் கூட பார்க்கக் கிடைத்தது.

அமைதியான போராட்டங்களில் ஈடுபடும், ஜனநாயக சுதந்திரத்தை அனுபவிப்பவர்களுக்கு எதிராகச் செயற்படும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டிவரும்.

அரச பயங்கரவாதத்துக்கும் அரச வன்முறைக்கும் நீண்ட கால ஆயுள் இல்லை. இதற்கு வரலாற்றில் பல படிப்பினைகள் உள்ளன.

உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுகின்றேன். முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்துங்கள் எனவும் சவால் விடுத்தார்.

தேர்தலை ஒத்திவைக்கப் பல்வேறு சூழ்ச்சிகளைப் பயன்படுத்துவதை விடுத்து,முடிந்தால்  மொட்டு விரும்பும் எந்தத் தேர்தலையும் நடத்துங்கள் என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்