ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து இலங்கையை வந்தடைந்தார்.
சமகால அரசியலில் தீர்மானம் மிக்க சில அரசியல் முடிவுகளை எடுக்கும் மற்றும் பிரதான ஆளுங்கட்சியாக உள்ள பொதுஜன பெரமுனவை வழிநடத்து நபராகவும் பசில் இருக்கிறார்.
இவரது அனுமதியின்றி எந்தவொரு சுயாதீன முடிவுகளையும் பொதுஜன பெரமுனவின் தலைமைப்பீடத்தால் எடுக்க முடியாது.
கடந்த ஒரு மாதகாலமாக பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் தங்கியிருந்ததுடன், இலங்கையில் இருந்து சென்ற எந்தவொரு அழைப்புகளுக்கும் அவர் பதில் அளிக்கவும் இல்லை.
அமெரிக்காவில் சில ரகசிய சந்திப்புகளை பசில் நடத்தியதாகவும் தேர்தலுக்கான வியூகத்தை அவர் வகுத்து வருவதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று காலை இலங்கை திரும்பிய பசில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
”அரசியலமைப்பின் படி முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்த முடியும்.
இருப்பினும் பொதுஜன பெரமுன எந்த தேர்தலுக்கும் தயாராகவே உள்ளது. நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.
ஜனாதிபதி வேட்பாளர் யாரென இன்னமும் முடிவுசெய்யப்படவில்லை. ஜனாதிபதியாக யார் தெரிவானலும் அவர் பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி தெரிவாக முடியாது.
நாங்கள் மக்களை ஒருபோதும் ஏமாற்றவில்லை. சில இடங்களில் தவறான தீர்மானங்களை எடுத்துள்ளோம். மக்கள் சொல்வதை நாங்கள் ஏற்றிருக்கவில்லை. நாங்கள் சொன்னதை மக்கள் ஏற்றிருக்கவில்லை.” என்றார்.
தேர்தல் வியூகத்துடன் இலங்கை திரும்பியுள்ளார்
பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் இருந்த காலப்பகுதியில் அடுத்த தேர்தலுக்கான திட்டத்தையே வகுத்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
ஜனாதிபதித் தேர்லுக்கு முன்னர் பொதுத் தேர்தலொன்றை நடத்துவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுங்கட்சியின் திட்டமாக உள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் வெற்றி வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்பது பொதுஜன பெரமுனவின் கணக்காகும்.
ரணிலை சந்திக்கும் பசில்
எதிர்வரும் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெற முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கான திட்டங்களுடன்தான் பசில் இலங்கை திரும்பியுள்ளதாகவும் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ரகசியமாக அவர் சந்திக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது.
பசில் ராஜபக்சவின் வருகையுடன் தென்னிலங்கை அரசியலில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.
குறிப்பாக பொதுஜன பெரமுனவின் தேர்தல் கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் சில தெளிவான முடிவுகள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.