day, 00 month 0000

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை நிலைப்பாடுகளை ஏற்கோம்

தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருக்கும் இலங்கை, இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதைவிடுத்து, அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்குத் துணைபோகும் சில தரப்பினரின் 'இரட்டை நிலைப்பாடுகளை' தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது. 

அதுமாத்திரமன்றி காஸாவிலுள்ள மக்களின் நிலைவரம் மோசமடைந்திருக்கும் நிலையில், அதுபற்றிய தீர்மானங்களும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் எங்கே? எனவும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. அதன்படி நாளை திங்கட்கிழமை (4) இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து ஆராயப்படவுள்ள நிலையில், நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் நேற்று முன்தினம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் வாய்மொழிமூல அறிக்கை வெளியிடப்பட்டது. 

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டவரைபை அரசாங்கம் வெளியிட்டிருப்பினும், நம்பத்தகுந்த உண்மையைக் கண்டறியும் செயன்முறைக்கு ஏதுவான சூழல் இலங்கையில் இல்லை எனவும், ஒடுக்குமுறைச்சட்டங்கள் மற்றும் எதேச்சதிகாரப்போக்கிலான நடவடிக்கைகள் மூலம் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்ளமுடியாது எனவும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து அவரது அறிக்கை தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தியும் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணாதிலகவினால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

அண்மைய காலங்களில் முகங்கொடுத்திருக்கும் சவால்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில், நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பக்களின் நிலையான தன்மையைப் பேணும் அதேவேளை, பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்கம் சார்ந்த இலக்குகளில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. 

அதேவேளை பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் நலிவுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்துறை சார்ந்த விடயங்களில் வழமையான நிலையை அடைந்துகொள்வதில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது. 

அதேபோன்று மிகத் தீவிர மட்டுப்பாடுகள் இருப்பினும், தேசிய ஒருமைப்பாடு, போரின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான எமது முயற்சிகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. 

அத்தோடு ஏற்கனவே நிறுவப்பட்ட உள்ளகப் பொறிமுறைகளின் ஊடாக இவ்விடயத்தில் முன்னேற்றத்தை எட்டுவதில் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

அதன்படி, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டவரைபு தொடர்பான கலந்துரையாடல்கள் அரசாங்கம், சிவில் சமூகம், சர்வ மதத்தலைவர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதேபோன்று காணாமல்போனோர் அலுவலகத்துக்கு முதற்கட்டமாகக் கிடைக்கப்பெற்ற 6,025 முறைப்பாடுகளில் 5,221 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

1,313 குடும்பங்களுக்கு காணாமல்போனமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதுடன் அது செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் 2028ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக கடந்த ஆண்டு நாடு முகங்கொடுத்திருந்த நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் ஊடாக காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு 42 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகமானது பாராளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பிரத்யேக சட்டத்தின் ஊடாக மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சார்ந்த விவகாரங்களைக் கையாள்வதற்கும், தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குமென ஜனாதிபதி செயலகத்தின்கீழ் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஆதாரங்களை திரட்டுவதற்கான வெளியகப் பொறிமுறையை முன்மொழிந்திருக்கும் 46/1 மற்றும் 51/1 ஆகிய இரண்டு தீர்மானங்களையும் நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். 

ஐக்கிய நாடுகள் சபையானது நிதிநெருக்கடி மற்றும் மனிதவளப்பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய பயனற்ற பொறிமுறைக்கு உறுப்புநாடுகளின் நிதியைப் பயன்படுத்துவது பேரவையின் கோட்பாடுகளுக்கு முரணானதாகும். 

அதன் நோக்கம் சில நபர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதேயன்றி, அதனூடாக இலங்கை மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிட்டாது.

அடுத்ததாக தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் சில உள்நாட்டு சட்டங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நிகழ்நிலை காப்பு சட்டத்தைப் பொறுத்தமட்டில், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரிடமிருந்தும் ஆலோசனைகளை பெற்று அதனைத் திருத்தியமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம், இச்சட்டமூலம் குறித்த தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது. 

அடுத்ததாக, அரச சார்பற்ற அமைப்புக்கள் குறித்த சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்களுடன் 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இவையனைத்தும் இலங்கையில் முன்மொழியப்படும் எந்தவொரு சட்டமூலத்தையும் சவாலுக்குட்படுத்தும் சுதந்திரம் பொதுமக்களுக்கு உண்டு என்பதையே காண்பிக்கிறது. 

மேலும், தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டியது அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எமது அண்மையகால நடவடிக்கைகளே அதற்கு சான்றாகும். 

அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதை விடுத்து, அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு துணைபோகும் சில தரப்பினரின் 'இரட்டை நிலைப்பாடுகளை' எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. காஸாவில் உள்ள மக்கள் தீவிர அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளனர். அவ்வாறிருக்கையில் அது பற்றிய தீர்மானங்களும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் எங்கே? என்று கேள்வி எழுப்பினார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்