day, 00 month 0000

“தாயின் கையால் ஒரு வாய் உணவு சாப்பிட வேண்டும்”: கொடுமையான சிறப்பு முகாம், நிறைவேறாமல் போனது சாந்தனின் இறுதி ஆசை

“தன் தாயின் கையால் ஒரு வாய் உணவு சாப்பிட வேண்டும்” என்பதே சாந்தனின் கடைசி ஆசையாக இருந்தது என அவருக்கான சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற சாந்தனுக்கான அஞ்சலி நிகழ்வின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“2005 ஆம் ஆண்டு முதல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக தொடர்ச்சியாக வழக்காடி வருகின்றேன்.

சுமார் 32 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்ட போது சாந்தன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். எனினும், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட போது மிகவும் துன்பத்திற்கு ஆளானார்.

சிறையை விட கொடுமையானது சிறப்பு முகாம். சிறையில் 32 ஆண்டுகளை உடல் ஆரோக்கியத்தோடு கழித்த சாந்தன், சிறப்பு முகாமில் ஒரு ஆண்டு கூட இருக்க முடியவில்லை.

காரணம் அது 120 சதுர அடிகொண்ட ஒரு சிறிய அறையாகும். இந்த அறையில் முருகனும், சாந்தனும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை நானும், நளினி அக்காவும் நேரில் சென்று பார்த்துவிட்டு வருவோம். எனினும், ஆறு மாதங்களுக்கு பிறகு சாந்தன் உடல் மெலிந்து காணப்பட்டார்.

அவருக்கு சிகிச்சையளிக்க முருகன் வற்புறுத்தினார். ஆனால் சாந்தன் “எனக்கு ஒன்றுமில்லை, என் அம்மா கையால் ஒரு வாய் சாப்பிட்டால் போதும்” என்றார். அதுதான் அவர் கூறிய ஆசை வார்த்தையும் கூட.

நான் ஊருக்கு போய் அம்மாவின் கையால் ஒரு கை சாப்பிட்டால் போதும், எனக்கு எந்த நோயும் வராது” என்று சாந்தன் கூறினார்.

எனினும், அவருக்கு ஏற்பட்ட உடல் நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சாந்தனை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. எப்படியாவது ஊருக்கு அனுப்பி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்கான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

ஆனாலும் அத்தனை நடவடிக்கைகளையும் மீறி சாந்தன் உடல்நல குறைவால் கடந்த 28ஆம் திகதி காலை உயிரிழந்தார்.” என சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்