day, 00 month 0000

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சகல எதிர்க்கட்சிகளும் ஆதரவு - ரஞ்சித் மத்தும பண்டார

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்குச் சகல எதிர்க்கட்சிகளும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை மாற்றும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு கிடையாது என்பதை சபாநாயகர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியும், சபாநாயகரும் சட்ட விரோதமாகச் செயற்படுகின்றனர். எனவே தான் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்துள்ளோம். அதற்குச் சகல எதிர்க்கட்சிகளினதும் ஆதரவு கிடைத்துள்ளது. நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை சபாநாயகர் நடைமுறைப்படுத்தவில்லை. குறித்த சட்ட மூலத்திலுள்ள 57 சரத்துக்களில் 35 சரத்துக்கள் திருத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் சபாநாயகர் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பில் சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கமையவே தான் செயற்பட்டதாகச் சபாநாயகர் குறிப்பிடுகின்றார். சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தை விட உயர்ந்தவர் அல்ல. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை சட்டமா அதிபரால் மாற்ற முடியாது என்பதைச் சபாநாயகர் அறிந்திருக்கவில்லையா? இது இவ்வாறிருக்க மறுபுறம் அரசியலமைப்பு  பேரவையின் அங்கீகாரம் இன்றி பொலிஸ்மா அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரஜைகளைத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியவர் என்று உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஒருவரே இன்று பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டால் நாட்டில் எவ்வாறு சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட முடியும்? என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்