1980 ஆம் ஆண்டில், அப்போதைய லிபிய அதிபரான கேணல் முவம்மர் கடாபியை கொலை செய்யும் முயற்சியில் 81 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த இத்தாலியப் பயணிகள் விமானமொன்றை பிரெஞ்சுப் படையினர் கவனயீனமாக சுட்டு வீழ்த்தினர் என இத்தாலியின் முன்னாள் பிரதமர் குய்லியானோ அமாட்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
இச்சம்பவத்துக்கு அமெரிக்காவும், பிரான்ஸும் பொறுப்பு எனவும், தோல்வியடைந்த இப்படுகொலை முயற்சி மூடி மறைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
1992, 1993 மற்றும் 2000,2001 காலப்பகுதிகளில் இரு தடவைகள் பிரதமராக பதவி வகித்தவர் குய்லியானோ அமாட்டோ.
1980 ஜூன் 27 ஆம் திகதி, இத்தாலியின், இத்தாவியா விமான நிறுவனத்தின் பிளைட் 870 விமானம் இத்தாலியின் போலோக்னா நகரிலிருந்து இத்தாலியின் சிசிலி தீவிலுள்ள பாலேர்மோ நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
மெக்டொனெல் டக்ளஸ் டிசி9 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம், மத்திய தரைக்கடலில் சிசிலி தீவுக்கு அருகிலுள்ள உஸ்டிக்கா தீவில் வீழ்ந்து நொறுங்கியது.
இதனால், விமானத்திலிருந்த 77 பயணிகள் உட்பட 81 பேரும் உயிரிழந்தனர். இத்தாலியில் இடம்பெற்ற மிக மோசமான விமான அனர்த்தம் இதுவாகும்.
இச்சம்பவம் இடம்பெற்று 43 வருடங்கள் கடந்த நிலையில், இத்தாலிய முன்னாள் பிரதமர் குய்லியானோ அமாட்டோ, இத்தாலியின் லா ரிபப்ளிக்கா பத்திரிகைக்கு அண்மையில் அளித்த செவ்வியில் மேற்படி குற்றச் சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
'அமெரிக்காவின் உதவியுடன், கேணல் முவம்மர் கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு பிரான்ஸ் முயற்சித்தது.
குறித்த தினத்தில் நேட்டோ விமானங்களின் போர்ப் பயிற்சியொன்று அப்பகுதியில் நடத்தப்பட்டது.
லிபிய இராணுவ விமானமென்றே உண்மையான இலக்காக இருந்தது. யூகோஸ்லாவியாவுக்கு சென்றிருந்த கேணல் கடாபி, மேற்படி விமானத்தில் பயணிப்பார் என நம்பப்பப்பட்டது. ஆனால், இது தொடர்பில் கடாபிக்கு இத்தாலியினால் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் அந்த இராணுவ விமானத்தில் அவர் பயணிக்கவில்லை என அமாட்டோ கூறியுள்ளார்.
எனினும், பிரான்ஸ் போர் விமானத்திலிருந்து ஏவுகணையினால் இத்தாவியா பிளைட் 870 பயணிகள் விமானம், சுட்டுவீழ்த்தப்பட்டது என அமாட்டோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி, இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் பிரான்ஸ் மன்னிப்பு கோர வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனிடம் அமாட்டோ கோரியுள்ளார்.
அவ்விமானம் வீழ்ந்தது எப்படி என்பது நீண்ட காலமாக மர்மமாகவே இருந்தது. அது சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கலாம் அல்லது விமானத்தில் குண்டுவெடித்திருக்கலாம் என சிலர் கூறியிருந்தனர். பல வருடங்களின் பின் கடலடியிலிருந்த விமானச் சிதைவுகள் ஆராய்ப்பட்டபின்னர், அது ஏவுகணையினால் சுடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
குறித்த இரவில் அப்பகுதியின் வான் பரப்பில் இராணுவ நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என அமெரிக்க, பிரான்ஸ், நேட்டோ அதிகாரிகள், மேற்படி சம்பவத்தின் பின்னர் தெரிவித்திருந்தனர்.
லிபிய, பிரான்ஸ் போர் விமானங்களுக்கு இடையிலான மோதலின்போது, தவறுதலாக இப்பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மேற்படி சம்பவம் இடம்பெற்ற காலத்தில் இத்தாலிய பிரதமராக பதவி வகித்த, பிரான்சிஸ்கோ காசிகா 2008 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.
மேற்படி விமானத்தைப் பாதுகாக்கத் தவறியமைக்காக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 100 மில்லியன் யூரோ இழப்பீட்டை இத்தாலிய அரசு வழங்க வேண்டும் என இத்தாலிய நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
கேணல் கடாபி 2011 ஆம் ஆண்டு லிபிய உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் அமாட்டோவின் கருத்து தொடர்பாக பிரான்ஸ் அரசு உடனடியாக கருத்துத் தெரிவிக்கவில்லை.
இத்தாலியின் தற்போதைய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறுகையில், அமாட்டோவின் கருத்து கவனத்திற்கொள்ளத் தக்கது. எனினும், அவர் தனது சொந்த அனுமானங்களுக்கு அப்பால், உறுதியான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். இது தொடர்பில் தன்னிடம் உறுதியான ஆதாரம் இல்லை என அமாட்டோ கூறியுள்ளார்.
அமாட்டோவின் கருத்தானது, பிரான்ஸ் – இத்தாலிய உறவுகளில் அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.