குருந்தூர் மலையில் இந்துக்கள் மத வழிபாடுகளில் ஈடுபடும் சூழலை தொல்பொருள் திணைக்களமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.பொங்கல் நிகழ்வால் பௌத்தர்களின் மனம் பாதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோவிலில் பௌத்தர்கள் பௌத்த மத வழிபாடுகளில் ஈடுபடுவதில்லை.தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர புத்தசாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலை கலாசார அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த புத்தசாசனம்,மத விவகாரங்கள் மற்றும் கலை கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் 2 வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. நான் குறிப்பிடும் கருத்துக்கள் வழக்குக்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமையலாம். ஆகவே கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்துக் கொள்கிறேன் என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குருந்தூர் மலை பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தும் பல சான்று பொருட்கள் கிடைத்துள்ளன.
குருந்தூர் மலையில் இந்துக்கள் வழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதற்கு எவ்வித சான்றுகளும் கிடையாது. இருப்பினும் குருந்தூர் மலை தமிழ் இந்துக்களுக்கு சொந்தமானது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.
குருந்தூர் மலையில் தமிழர்கள் இந்து மத வழிபாடுகளில் ஈடுபடுவற்கு தொல்பொருள் திணைக்களம் வாய்ப்பளித்துள்ளது. இவ்வாறான நிலையில் தான் அவர்கள் குருந்தூர் மலைக்குச் சென்று பொங்கல் வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டிய தொல்பொருள் திணைக்களம் தொல்பொருள் கட்டளைச்சட்டங்களுக்கு புறம்பாக செயற்படுகிறது.
குருந்தூர் மலை தொடர்பான வழக்கில் தொல்பொருள் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்துக்கு முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி 'குருந்தூர் மலையில் இந்து மத வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களம் தடை விதிக்கவில்லை' என மன்றுக்கு அறிவித்துள்ளார். இதன்பின்னரே முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குருந்தூர் மலையில் இந்துக்களின் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதால் பௌத்தர்களின் மனம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் மதவாத முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கு ஒரு காரணியாக அமையும். நல்லூர் கோவிலுக்குச் சென்று பௌத்தர்கள் வழிபாடுகிறார்கள். ஆனால் எவரும் அங்கு பௌத்த மத வழிபாடுகளில் ஈடுபடுவதில்லை.
குருந்தூர் மலை விவகாரத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிரான என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள்,கலை கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்கவை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த புத்தசாசன,மத விவகாரங்கள் மற்றும் கலை கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இந்த விடயத்தை சுற்றி வளைக்காமல் ஓரிரு வார்த்தைகளில் கேட்டிருக்கலாம். இந்த கேள்விக்கு நான் ஓரிரு வார்த்தைகளில் பதிலளிக்கிறேன்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் நான் குறிப்பிடும் கருத்துக்கள் அந்த வழக்கு விசாரணைக்கு சாதகமாகவும் அமையும் பாதகமாகவும் அமையும் ஆகவே நீங்கள் (ஜயந்த சமரவீர) முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்துக் கொள்கிறேன் என்றார்.