ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, அந்த கட்சியின் சில தீர்மானங்கள் காரணமாக கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக அரச ஊடகம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதனால், அவர் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய தயாராகி வருவதாகவும் அதில் கூறப்பட்டது.
தயாசிறி ஜயசேகர, ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து செயற்படுவது தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் இதன் போது தனக்கு கட்சியின் பிரதான பதவியோ அல்லது குருநாகல் மாவட்ட தலைவர் பதவியோ வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பேசப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த கோரிக்கை சம்பந்தமாக ஐக்கிய தேசியக்கட்சியின் குருநாகல் மாவட்ட முக்கியஸ்தர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய தேசியக்கட்சியில் மீண்டும் இணைவார் என்றால், கட்சியின் யாப்பில் திருத்தங்கள செய்து, மூன்று பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளை ஏற்படுத்தி அதில் ஒன்றை அவருக்கு வழங்கலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரச ஊடகத்தில் வெளியான செய்தியை முற்றாக நிராகரிப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.