day, 00 month 0000

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று முதல் போக்குவரத்து தடை ; யாழில் திரண்ட பக்தர்கள்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளைய தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன் படி யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 9.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளைய தினம் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் 14ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , அன்றைய தினம் மாலை கொடியிறக்க திருவிழா இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று முதல் போக்குவரத்து தடை

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை(21) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (20) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்திருந்தது.

இந்நிலையில, நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி வரை நீடிக்கும் என்றும் நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ்ப்பாண நகரை அடைய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்