மருத்துவ விசா மற்றும் மனித கடத்தல்காரர்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட கடவுச்சீட்டில் நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய (BIA) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த வாரம் தொடக்கத்தில் விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
இவ்வாறு விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனைவரும் வட மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பிவைப்பதற்கு ஆட்கடத்தல் காரர்களுக்கு ஐந்து மில்லியன் ரூபா வரையில் வழங்கக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
"இது வடக்கில் செயல்படும் பரந்த மனித கடத்தல் வளையத்தின் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது, மேலும் பாக்கு நீரிணை மற்றும் பிற கடல் வழிப் பாதைகளில் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வான்வழிப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்.
தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் பயணிப்பதாக நம்பப்படுகிறது. பின்னர் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு ஐரோப்பாவை நோக்கிச் செல்கின்றனர்.
"எங்களிடம் நன்கு பயிற்சி பெற்ற குடிவரவு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் 24 மணிநேரமும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
எவ்வாறாயினும், ஒரு நபர் அல்லது நபர்கள் மீது சந்தேகம் இருந்தாலும், ஒரு முறையான பயணி நாட்டை விட்டு வெளியேறுவதை எங்களால் தடுக்க முடியாது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சில தவறான அதிகாரிகளின் உடந்தையையும் நிராகரிக்க முடியாது," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.