ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்பொழுது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகத்தையே சர்வகட்சி கூட்டத்தை மையப்படுத்தி முன்னெடுத்து வருகிறார்.
இதற்கு நாம் துணை போக முடியாது. 13ஆவது திருத்த சட்டம் சம்பந்தமாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்துகின்ற பொழுது அதுசம்பந்தமான பரிந்துரைகளை செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வக மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ள மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமான பரிந்துரைகளையும், முன்மொழிவுகளையும் முன்வைக்கும் கோரிக்கைக்கு பதிலளிக்குமா என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார்.
அதன் ஒரு அங்கமாகவே சர்வகட்சி மாநாட்டை கூட்டி தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்க போவதாகவும் அதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவையும் கோருவதாகவும் தெரிவிக்கின்றார்.
அந்த வகையில் 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் யோசனைகளை அவர் தற்போது கோருகினறார்.
ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் என்ன நிலைபாட்டை கொண்டிருக்கின்றது என்பது பகிரங்கப்படுத்தப்படவில்லை. அரசாங்கத்துக்குள் இந்த விடயம் சம்பந்தமாக முரண்பாடான நிலைமைகள் இருக்கின்றன. அது பகிரங்கமான விடயம்.
அவ்வாறிருக்கையில் எதிர்க்கட்சிகளிடமே ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் கடன்மறு சீரமைப்பு, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தல் போன்ற விவகாரங்களில் அரசாங்கமாகவே தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கோரவில்லை.
இந்நிலையில் 13ஆவது திருத்தச் சட்ட விடயத்தில் மாத்திரம் எதற்காக அரசாங்கத்தின் முடிவை அறிவிக்காது எதிர்கட்சிகளின் நிலைப்பாட்டை கோருகின்றார் என்பதே இங்குள்ள பிரதான விடயமாகும்.
எம்மை பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்துகின்ற பொழுது நாம் எமது பரிந்துரைகளையும் கருத்துகளையும் முன்வைப்பதற்கு தயாராக இருக்கிறோம். அதனை விடுத்து ஜனாதிபதியின் ஏமாற்று நாடகங்களுக்கு நாம் துணை போகப் போவதில்லை என்றார்.