கருங்கடலில் நோவோரோசிஸ்கில் என்ற இடத்தில் உள்ள ரஷ்ய கடற்படை தளத்தின் மீது உக்ரைன் ட்ரோன் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு ரஷ்ய போர்க்கப்பலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடற்படைத்தளம் அமைந்துள்ள துறைமுகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காஸ்பியன் பைப்லைன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து வரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் ரஷ்யாவுக்கு உக்ரைன் மரண அடியை கொடுத்துள்ளதாக சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திய கடற்படைத்தளமானது உலகிற்கு எண்ணெய் மற்றும் தானியங்களை விநியோகிக்கும் கேந்திர நிலையமாகும்.
இந்த தாக்குதலில் ரஷ்யாவின் போர்க்கப்பலான Olenegorsky Gornyak என்ற கப்பல் கடுமையாக சேதமடைந்துள்ளது. சுமார் 450 கிலோ டிஎன்டியை வெடி மருந்துகளை ஏற்றிச் சென்ற ட்ரோன் விமானங்கள் கப்பலை தாக்கியதாக உக்ரைன் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலின் போது சுமார் 100 ரஷ்ய வீரர்கள் கப்பலில் இருந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதல் இரவில் நடந்தாலும், ட்ரோன் கெமராவில் தாக்குதல் நடந்த காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன.
இந்த காணொளியை உக்ரைன் இராணுவம் ஊடகங்களில் வெளியிட்டது.
தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யப் படையினர் இரண்டு கடல் ட்ரோன்களின் உதவியுடன் தளத்திற்கு வெளியே உக்ரைனின் ட்ரோன் விமானங்களை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் எதனையும் குறிப்பிடவில்லை.
இந்த தாக்குதல்களுக்காக உக்ரைனின் கடல்சார் ட்ரோன் விமானங்கள் சுமார் 760 கிலோமீட்டர்கள் பயணித்திருக்கும் என ஓய்வுபெற்ற உக்ரைன் கடற்படை தளபதி Andriy Ryzenko கூறியுள்ளார்.
உக்ரைனின் ட்ரோன் விமானங்கள் நெடுந்தூரம் சென்று தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை எனவும் தெரிவித்துள்ளார்.