உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யாவின் ட்ரோன் தாக்கியதையடுத்து 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமாகியிருக்கின்றன.
இந்த தாக்குதல் ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தின் மீது நடத்தப்பட்டுள்ளது.
40 டன் தானியங்களும் ஆபிரிக்கா, சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்தன.
தானியங்களை ஏற்றி செல்ல கப்பல்கள் இஸ்மாயில் துறைமுகத்திற்கு உள்ளே வர இருந்தவேளையிலேயே குறித்த ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றது.
மேலும்,இஸ்மாயில் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றி செல்லும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலையடுத்து, கோதுமை விலை ஏறக்குறைய 5 வீதமாக உயர்ந்தது.
“உலகத்திற்கே பெரும் நாசத்தை விளைவிக்கும் ஒரு போரை ரஷ்யா நடத்தி வருகிறது.ரஷ்யாவின் இந்த செயல் உலக உணவு சந்தையையே அழிந்துவிடும். ரஷ்யாவும் அதைதான் விரும்புகிறது. தானிய விநியோகம் பாதிக்கப்படுவதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்” என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா மறுத்துள்ளது. இஸ்மாயில் துறைமுகம் அயல்நாட்டு பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் புகலிடமாக திகழ்ந்தது" என தெரிவித்துள்ளது.
'கருங்கடல் தானிய ஒப்பந்தம்' உடன்படிக்கையில் இருந்து ரஷ்யா விலகியதால் உலகளவில் தானியங்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதுடன், தானியங்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இது உலகளவில் பல மில்லியன் மக்களுக்கு பசி மற்றும் மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில் இந்த ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.