இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதிலுள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார் என்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இன்று நேரில் தெரிவித்தார்.
அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று இந்தியத் தூதுவர் மேலும் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதுவருடன் பிரதித் தூதுவர், அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், கோவிந்தன் கருணாகரம், சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன் ஆகியோர் பங்கேற்றனர். ஏனைய எம்.பிக்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், இரா.சாணக்கியன், எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டபோது, என்னென்ன விடயங்கள் இந்தியத் தரப்பினால் அறிவுறுத்தப்பட்டது என்பது குறித்து இந்தியத் தூதுவர் விளக்கமளித்தார். அத்துடன் இலங்கை - இந்தியக் கூட்டறிக்கையையும் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இந்தியத் தூதுவர் கையளித்தார்.