இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
கூட்டமைப்பின் கோரிக்கையின் பிரகாரம் இந்த சந்திப்புக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மின்னஞ்சல் ஊடாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் இந்திய தூதுவர் அவசர சந்திப்பை நடத்தவுள்ளார்.
இந்தச் சந்திப்பில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்ட கருத்துக்கள், சர்வகட்சிக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் மற்றும் இந்திய பிரதமரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையை மீளாய்வு செய்தல் உட்பட தமிழ் மக்கள் சமகாலத்தில் எதிர்கொண்டுள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக கூட்டமைப்பின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிந்தது.