இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்றுடன் மூடப்படுகின்றது.
வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கு நோர்வே அரசாங்கம் கடந்த வருடம் தீர்மானித்தது.
இதற்கமைய, இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து தூதரகங்களை இந்தமாத இறுதிக்குள் நிரந்தரமாக மூடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் முன்னதாக அறிவித்தது.
ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலுள்ள பல தூதரகங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தூதரகம் சுட்டிக்காட்டியது.
அத்துடன், இலங்கையில் உள்ள தூதரகத்தை மூடும் தீர்மானமானது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எந்தவொரு தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என நோர்வே தூதரகம் தெரிவித்தது.
இந்த நிலையிலேயே, இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளதாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடனான இருதரப்பு உறவை கையாளுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் தூதரகம் சார் விடயங்களை உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் காணலாம் எனவும் அதை பின்தொடர்வதன் மூலம் மேலும் பல தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நோர்வே அலுவலகம் காணப்படுகின்றது. இதனடிப்படையில், நோர்வே 1996ஆம் ஆண்டு கொழும்பில் தூதரகத்தை திறந்தது.
வரலாற்று ரீதியாக, நோர்வே இலங்கையில் இருப்பதற்கான ஒரு முக்கிய பகுதி சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயல்பாட்டில் நோர்வேயின் பங்கோடு இணைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.