அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின்கீழ் அதிகாரப்பகிர்வு என்ற ஜனாதிபதியின் முன்மொழிவு மற்றும் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு என்பன உள்ளடங்கலாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸாவுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு சனிக்கிழமை (29) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் அலி சப்ரி கூறியதாவது:
இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஆழமான பிணைப்பு அண்மையகாலத்தில் பரஸ்பரம் நிகழ்ந்த உயர்மட்ட விஜயங்களின் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இருமுறை ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டதுடன் அந்நாட்டுப் பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவுடன் விரிவான கலந்துரையாடல்களையும் முன்னெடுத்திருந்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் கொண்டாடப்பட்ட இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுக்கு ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வருகைதந்திருந்தார்.
இலங்கை கடந்த ஆண்டு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் ஜப்பான் வழங்கிய உதவிகள் மற்றும் வெளிப்படுத்திய ஒருமைப்பாடு என்பவற்றை நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.
அதேவேளை இலங்கை - ஜப்பானுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு அவசியமான சில முக்கிய செயற்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளோம்.
அதன்படி ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஜப்பானிய முதலீட்டு செயற்திட்டங்களை ஆரம்பிக்குமாறும், மின்சாரம், துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் ஜப்பானுக்கு அழைப்புவிடுத்துள்ளோம்.
அதேபோன்று பொருளாதார மீட்சி மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கு தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறித்தும், நாட்டிலுள்ள பின்தங்கிய சமூகப்பிரிவினருக்கு அவசியமான உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்தும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளோம்.
அதுமாத்திரமன்றி அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின்கீழ் அதிகாரப்பகிர்வு என்ற ஜனாதிபதியின் முன்மொழிவு மற்றும் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு என்பன உள்ளடங்கலாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் எடுத்துரைத்தோம்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் மீட்சியை நோக்கிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதன் நீட்சியாக எதிர்காலத்தில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நல்லுறவு மேலும் வலுவடைவதற்கு ஏதுவான சிறந்த வாய்ப்புக்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.