சர்வக்கட்சி மாநாடு எப்படி நடத்தப்பட கூடாது என்பதை ஜனாதிபதி உலகத்திற்கு காட்டியுள்ளார் எனவும் வரலாறு முழுவதும் நடந்த அரசியல் சூதாட்டத்தை தற்போதாவது நிறுத்த வேண்டும் எனவும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலை அநீதியாக ஒத்திவைத்து, 13 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் கீழ் அதிகாரத்தை பரவலாக்கிய மாகாண சபைகளை செயலிழக்க செய்யும் முதன்மையான காரியத்தை ரணில் விக்ரமசிங்கவே செய்தார்.
இந்த நிலையில், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி, தனது அரசியல் வேலைத்திட்டத்தில் எதிர்க்கட்சியின் முத்திரை குத்த ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சி முழுமையாக தோல்வியடைந்தது.
சர்வக்கட்சி மாநாடு ஒன்றை எப்படி நடத்தக்கூடாது என்பதை ஜனாதிபதி முழு உலகத்திற்கும் காட்டியுள்ளார்.
பொறுப்புக்கூறும் அரசியல் கட்சி என்ற வகையில் சுதந்திர மக்கள் காங்கிரஸ் சர்வக்கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டது.
ஜனாதிபதியின் அரசியல் வேலைத்திட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் முத்திரையை குத்திக்கொள்ள முயற்சிக்கின்றரா என்ற சந்தேகத்திலேயே நாங்கள் அதில் பங்கேற்றோம்.
சர்வக்கட்சி மாநாடு தொடர்பான உண்மையான வடிவத்தை மக்கள் காணவில்லை. தொகுக்கப்பட்ட காட்சிகளை மாத்திரமே மக்கள் பார்த்தனர்.
எனினும் அதில் இருக்கும் கதை வேறொன்று. சர்வக்கட்சி மாநாடு முற்றிலும் தோல்வியடைந்த மாநாடு.
தற்போதைய அரசாங்கம் அதிகாரம் பரவலாக்கப்படுவது பற்றி பேசுகிறது. எமது நாட்டின் நிர்வாக முறைக்கு அமைய அதிகாரம் பகிர்ந்து செல்லும் சிறிய கட்டமைப்பே உள்ளூராட்சி சபைகள். 341 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் அநீதியாக ஒத்திவைத்தது.
சிறிய நிர்வாக கட்டமைப்புக்கு அதிகாரத்தை வழங்க விரும்பாத அரச தலைவர், அரசாங்கம், மாகாண சபைகளுக்கு 13வது திருத்தச் சட்டப்படி அதிகாரங்களை வழங்குமா?. இது நியாயமான சந்தேகம்.
அதிகாரத்தை பரவலாக்கும் எண்ணக்கருவை கொண்டு எமது நாட்டில் முதலில் மாவட்ட அபிவிருத்தி சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் நடைபெற்றது. இதன் போது இலங்கை வரலாற்றில் அரசியல் கரும்புள்ளியை ஏற்படுத்தும் சம்பவங்கள் இதனுடன் சம்பந்தப்பட்டு நடந்தன.
கொழும்பு, குருநாகல், கம்பஹா மாவட்டங்களில் இருந்து யாழ்தேவி ரயிலில் குண்டர்களை அழைத்துச் சென்று வடக்கில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையிட்டனர்.
இதற்கு தலைமை தாங்கிய தலைவர்களில் மூன்று பேர் தற்போது உயிருடன் இல்லை.
ஒருவர் மாத்திரம் உயிருடன் இருக்கலாம் என்பதால், அந்த தலைவர் பற்றி ஊடகங்கள் தேடி அறிந்து கூறுவது எதிர்காலத்திற்கு முக்கியமானது.
குண்டர்களை அழைத்துச் சென்று அதிகாரிகளை விரட்டி விட்டு, வாக்குகளை கொள்ளையிட்டனர். தெற்காசியாவின் புனித இடமாக இருந்த யாழ் நூலகத்தை தீயிட்டு அழித்தனர்.
அரசாங்கத்தின் குண்டர்கள் இவ்வாறே மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் வாக்குகளை கொள்ளையிட்டனர்.
இதனையடுத்தே வடக்கில் உள்ள இளைஞர்கள் தேர்தல் மீதான நம்பிக்கையை இழந்தனர்.
இதன் காரணமாக அவர்களுக்கு வாக்குச் சீட்டுக்கு பதிலாக துப்பாக்கியை எடுக்கும் மனநிலை ஏற்பட்டது. யாழ் இளைஞர்கள் அன்று வாக்குச்சீட்டு மீதான நம்பிக்கையை இழந்தனர்.
13வது திருத்தச் சட்டத்தின் படி அதிகாரத்தைப் பரவலாக்க உருவாக்கப்பட்ட மாதிரியே மாகாண சபை. மாகாண சபைகள் எதிர்கொண்டுள்ள நிலைமை மிகவும் தெளிவாக உள்ளது.
மாகாண சபைக்கு என்ன நடந்தது என்ற வரலாறு யாருக்கும் தெரியாது. குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு தெரியாது.
2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்களை நிறுத்துதல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் இரண்டு தாள்களில் மட்டுமே இருந்தது.
எனினும் குழு நிலை விவாதத்தின் போது இந்த சட்டமூலத்தில் இருபத்தி எட்டு திருத்தங்கள் சேர்க்கப்பட்டன.
பாராளுமன்ற வரலாற்றில் இது மிகப் பெரிய மோசடியாகும்.இது ஒரு கேவலமான அரசியல் நடவடிக்கையாகும், தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்த காலத்தில் இந்த மோசடி நடந்தது.
இந்த இரண்டு தாள்களில் ஏழு சரத்துக்கள் என்ற போர்வையில் மாகாண சபை முறைமை அழிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் போராட்டம் புறக்கணிக்கப்பட்டது.இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சட்டமூலத்தை கொண்டு வந்த அமைச்சர் பைசர் முஸ்தபா சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் நியமனத்தின் அடிப்படையில் மாகாண சபை தேர்தல் தற்போது வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மாகாண சபைகளும் செயலிழந்துள்ளளன. இன்று மாகாண சபைகளில் சபைகள் இல்லை, நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன.
இந்த நிலையில், 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரத்தை பரவலாக்க கொண்டு வரப்பட்ட மாகாண சபைகளை செயலிழக்க செய்ய மோசடியாக செயற்பட்ட தலைவர் மீண்டும் அதிகாரத்தை பரவலாக்கும் செயலை செய்ய போகிறேன் என கூறுவது சந்தேகத்திற்குரியதல்லவா? எனவும் டளஸ் அழகப்பெரும கேள்வி எழுப்பியுள்ளார்.