சிங்களத் தலைவர்களுடன் பல வருடங்களாக கலந்துரையாடிய போதிலும் இறுதியில் தமிழ் சமூகத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று (18) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்றிருந்த போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.
எனினும், தமிழ் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வையே விரும்புவதாக வலியுறுத்தியுள்ளனர்.
அதன் பின்னர், அதற்குத் தேவையான கட்டளைச் சட்டங்களை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
இதன்படி, 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்படும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சகல சட்டமூலங்களும் இம்மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அதன் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த அவர், பல வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் கூட்டாட்சி முறைமைக்காக வாக்களித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து அந்த அமைப்பின் கீழ் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குமாறு ஜனாதிபதியிடம் முன்மொழியுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதா? இல்லையா? என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தாம் எதிரானவர் எனவும், அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சில தீர்மானங்கள் தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி அறிவித்ததாகவும் அதன் பின்னர் இறுதி தீர்மானம் பாராளுமன்றத்தில் கையளிக்கப்படும் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் சாதகமான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள போதிலும் அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க பாராளுமன்றத்திற்கே உரிமை உண்டு என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.