day, 00 month 0000

ஈழத்தமிழர் தீர்விற்கு சாவுமணி! ஒற்றையாட்சியை நீக்கி சமஷ்டி அடிப்படையிலான தீர்விற்கு இந்தியா முன்வர வேண்டும்

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா தனது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஒற்றையாட்சியை நீக்கி சமஷ்டி அடிப்படையிலான தீர்விற்கு இந்தியா முன்வர வேண்டுமென்றும்  கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே கஜேந்திரன் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை ஜனாதிபதி இந்தமாத இறுதியில் இந்தியப் பிரதமரை சந்திக்கவுள்ளார். இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எங்களது நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி இந்திப் பிரதமருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளோம்.

குறிப்பாக ஒற்றையாட்சியை  நீக்கி சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நாங்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் வேறு சிலர் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் நீண்ட காலமாக நிராகரித்து வந்த 13 ஆவது திருத்தத்தை கோரியும் இருக்கின்றனர்.

எமது மக்கள் நிராகரித்து வந்த ஒற்றையாட்சி அடிப்படையிலான 13 ஆவது  திருத்தத்தை நீக்கி தமிழர் தேசம் அங்கிகரிக்கப்பட்ட சஷ்டியை கொண்டு வரவேண்டும் என நாங்கள் கோருகிறோம்.

அதைவிடுத்து இங்குள்ள சிலதரப்புகளுக்கு சலுகைகளைக் கொடுத்து 13 வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்துவது ஈழத்தமிழர் தீர்விற்கு சாவுமணி அடிக்கும் செயற்பாடாகவே அமையும்.

இனப்பிரச்சனையை நிரந்தரமாக தீர்ப்போம் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கூறுகிற நிலையில் நாங்கள் எங்களுக்கு தேவையான சமஷ்டியை கோரவேண்டிய நேரத்தில் யாருக்காகவோ 13 ஆவதை கோருவது மிகவும் ஆபத்தானது.

ஒற்றையாட்சி அடிப்படையிலான இந்த 13 ஆவது திருத்தத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். ஒற்றையாட்சி அடிப்படையிலான தீர்வு என்பது மிகவும் ஆபத்தானது. ஆகையினால் இதனை யார் யாருக்காக ஏன் கோருகின்றார்கள் என்பதை எமது மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட 13 ஆவதை நீக்கி சமஷ்டியை கொண்டு வர வேண்டுமென நாம் கோருகிறோம். 

ஆகையினால் ஈழத்தமிழர் தீர்வு விடயத்தில் ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை நீக்கி சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் கொண்டு வருவதற்கு ஏற்றவாறாக இந்தியா தனது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்