தன்னுடைய உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான ஆய்வு வரிசையில் சிறிலங்கா தொடர்பான 'உலகளாவிய காலரீதியான மீளாய்வு' எதிர்வரும் யூலை 10ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற அன்றைய தினம் சிறிலங்கா ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டிருக்கின்ற உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு தொடர்பில் விசாரணை செய்யுமாறு மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளிடம் மூன்று அமைப்புக்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
சிறிலங்காவானது கடந்த காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதுடன், நம்பிக்கையானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்க பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டிய தேவையையும் கொண்டுள்ளது என நெதர்லாந்து, ஜேர்மனி, நியூசிலாந்து, நோர்வே, அவுஸ்ரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் இம் மீளாய்வுக்கு அனுப்பப்பட்ட பரிந்துரைகளை காணாமற்போனவர்களின் குடும்பங்கள், சிறிலங்காவின்ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள், சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம்,ஆகிய அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், ரணில் விக்கிரமசிங்காவால் முன்மொழியப்பட்டுள்ள இந்த உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவானது, காணாமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் போன்ற முன்னைய அமைப்புக்களைப் போலவே, எண்ணிலடங்காப் பாதிக்கப்பட்டவர்களதும் அவர்களது குடும்பங்களதும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யப்போவதில்லை. குறிப்பாக முன்னைய
போர்ப்பிரதேசத்தில் புதிதாக மனிதப் புதைகுழி ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களதும் அவர்களது குடும்பங்களதும் ஆதங்கங்கள் இன்னமும் அதிகரித்துள்ளன' என சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பைச் சேர்ந்த பாஷன அபேயவர்த்தன கூறியுள்ளார்.
உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு அமைப்பதற்கான சட்டமசோதா இன்னமும் வெளியிடப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கமானது 'உலகளாவிய காலரீதியான மீளாய்வு' விற்கு குறிப்பிட்ட நாடுகளால் அனுப்பிவைக்கப்பட்ட பரிந்துரைகளை நிராகரித்துள்ளமையை வைத்துப் பார்க்கையில், வழக்குத் தொடர்வதற்கான ஆணை இவ்வாணைக்குழுவிற்கு வழங்கப்படுமெனத் தெரியவில்லை.
இவ்வாணைக்குழுவினால் விசாரணைகள் நடாத்தப்பட்டதும், அதற்கு 'இணையான' விசாரணைகளுக்குரிய தேவைகள் ஏதும் இருக்காது என்று கடந்த யூன் 26 ஆம் திகதி, பிரான்ஸ்24 இற்கு வழங்கிய நேர்காணில் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பதானது, எவ்விதமான குற்றவியல் வழக்குகளும் நடைபெறமாட்டாது என்பதையும்,ஏற்கனவே நிலுவையிலுள்ள குற்றவியல் வழக்குகளும் இரத்துச்செய்யப்படலாம் என்பதையுமே சுட்டிக்காட்டுவதாக அமைகின்றது.
'குற்றவியல் பொறுப்புக் கூறல்களுக்குப் பதிலாக, உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு ஒன்றினை உருவாக்குவது, சிறிலங்கா அங்கத்துவம் வகிக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுதல் தொடர்பான உடன்படிக்கை, மற்றும் தண்டனை விலக்களிப்புக்களை முறியடிப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட கோட்பாடுகள் உள்ளிட்ட ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விதிமுறைகளதும் நியமங்களதும் தெளிவான மீறலாகவே இருக்கப்போகின்றது' என ITJPயின் யஸ்மின் சூக்கா தெரிவித்தார்.
'கட்டமைப்பு மாற்றம் உள்ளிட்ட உண்மை, நீதி, பரிகாரங்கள், நினைவுச்சின்னங்கள், மீண்டும் நிகழமாட்டாது என்பதற்கான உத்தரவாதங்கள் என்பவற்றை வழங்கான இன்னுமொரு ஆணைக்குழு எங்களுக்குத் தேவையில்லை. சிறிலங்காவின் சர்வதேச மற்றும் உள்ளூர் கடப்பாடுகளை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவுக்கு ஆதரவினை வழங்கவேண்டாம் என நாங்கள் மனித உரிமைகள் சபை உறுப்புநாடுகளைக் கேட்டுக்கொள்கின்றோம்.' என காணாமற்போன குடும்பங்கள் அமைப்பின்
பிறிற்றோ பெர்ணாண்டோ கூறினார்