day, 00 month 0000

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் வீழ்ச்சி

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான பகுதியில் வசித்து வரும் மக்களின் குடிநீர்த் தேவையைப்  பூர்த்திசெய்யும் வகையில் நேற்றைய தினம்  மைலம்பாவெளி ஸ்ரீமுருகன் ஆலய வீதியில் குடிநீர் திட்டத்தின் ஆரம்ப விழா நடைபெற்றது.

அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் குறித்த குடிநீர் திட்டத்திற்கு 100மில்லியன் ரூபாய்  ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தனியாக அபிவிருத்தியை மட்டும் இலக்காகக் கொண்டு எதனையும் சாதிக்கமுடியாது என்பது எங்களுக்கு தெரியும். தனியாக  உரிமையினை மட்டும் இலக்காக கொண்டு வேலைசெய்யும்போது அபிவிருத்தியை இழந்து நிற்கின்ற சமூகமாக நாங்கள் மாறியிருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில்  தமிழ் சமூகம் தன் இருப்பினைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டுமானால் உரிமையினையும் அபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று முரண்படாத வகையில் சமாந்தரமாகக் கொண்டுசெல்லவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மூன்று இனமக்களும் வாழ்கின்றனர். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பயணத்தினை எடுத்துப்பார்த்தால் தங்கள் சமூகத்தின்  உரிமை சார்ந்த விடயத்திலும், அபிவிருத்தியிலும் கவனமாக இருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு பெரும்பான்மை சமூகமாக தமிழ் சமூகம் இருந்து வந்தது.  ஆரம்பத்தில் 58.9 சதவீதம் கிழக்கில் தமிழர்கள் இருந்தனர். ஆனால் அது  தற்போது 38.6வீதமாக மாறியுள்ளது.

சுமார் 20சதவீதத்தால் தமிழர்களின் விகிதாசாரம் குறைந்துள்ளது. இது கிழக்கில் தமிழர்களின்  பாரிய வீழ்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது” இவ்வாறு அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்