day, 00 month 0000

கனடாவிற்கும் மெட்டா நிறுவனத்திற்கும் இடையே மோதல்- எச்சரிக்கை விடுத்துள்ள கூகுள்

உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.

கனடா, அண்மையில் கொண்டு வந்த இணைய செய்தி சட்டம் (Online News Act) என்ற ஒரு சட்டம் இதன் பின்னணியில் உள்ளது .கனடா நாட்டின் செய்தி வெளியீட்டாளர்களிடமிருந்து மெட்டா, கூகுள், இன்ஸ்டாகிராம் போன்ற இணையவழி சமூக வலைதளங்கள் பெறும் உள்ளடக்கத்தை இணையத்தில் இணைக்கவோ அல்லது மறுபயன்பாடு செய்வதற்கோ அந்தந்த கனடா செய்தி வெளியீட்டாளர்களுக்கு அவர்களுக்குரிய விகிதாசார பணத்தை அவை தரவில்லை என கனடா குற்றஞ்சாட்டியது.

மேலும் பல அச்சு மற்றும் டிஜிட்டல் செய்தி பதிப்பகங்கள், வருவாய் குறைந்து பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டதால் உள்ளூர் வெளியீடுகள் நிதி ரீதியாக நிலை பெறுவதற்கு, இச்சட்டம் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக கனடாசுட்டிக்காட்டியிருந்தது.அதற்கு எதிர்வினையாக அமெரிக்காவின் மெட்டா நிறுவனம், கனடா நாட்டு செய்திகளை இனிமேல் தங்கள் வலைதளங்களில் நிறுத்த போவதாக அறிவித்தது. இது குறித்து மெட்டா செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில்,

இணைய செய்திச் சட்டம் எங்கள் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான உண்மைகளை அறியாத ஒரு குறைபாடுள்ள சட்டம். மெட்டாவின் சமூக தளங்களில் காண்பிக்கப்படும் செய்தி உள்ளடக்கத்திற்கான இணைப்புகளை மெட்டா சேகரிக்கவில்லை.அவற்றை முகநூல் அல்லது இன்ஸ்டாகிராமில் வெளியிட, அந்தந்த வெளியீட்டாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள். இந்த சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் பல குறைகள் உள்ளன.ஆனால், செயல்முறை மாற்றங்களைச் செய்ய ‘ஒழுங்குமுறை அமைப்பு’ அனுமதிக்கவில்லை. எனவேதான், வரும் வாரங்களில் கனடாவில் செய்திகளை நிறுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் கூறினார்.

மெட்டாவில் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், கனடாவின் பாரம்பரியத்துறை அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ் நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தின் முடிவை அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில்,மெட்டாவின் முடிவு பொறுப்பற்றது. கனடா இனி மெட்டாவின் வலைதளங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்தப்போகிறது. இருப்பினும், ஒரு சுமூக முடிவிற்காக அரசாங்கம் இந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

2021-2022-ம் ஆண்டில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்காக, கனடா அரசாங்கம் சுமார்8.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட்டுள்ளதாக அரசாங்க செலவினங்கள் பற்றிய வருடாந்திர அறிக்கை காட்டுகிறது.அதேவேளை மெட்டா நிறுவனத்தை தொடர்ந்து, கூகுள் நிறுவனமும், 6 மாதங்களில் கனடாவின் இந்த மசோதா நடைமுறைக்கு வரும்போது அந்நாட்டு செய்திகளை தடுக்கப்போவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்