cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

இந்தியர்களைப் போல் ஒன்றுபடுங்கள் - யாழில் மைத்திரி வேண்டுகோள்

பல இன, மொழி, மத மக்கள் வாழும் நாடாக உள்ள இந்தியாவில், 'இந்தியர்கள்' என்ற ரீதியில் அனைவரும் ஒன்றுபடுவதை போல இலங்கையிலும் 'இலங்கையர்' என்ற ரீதியில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (01) யாழ்ப்பாணத்தில் உள்ள புத்திஜீவிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை சந்தித்தபோதே மைத்திரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

30 வருட யுத்தம் வடக்கையும் தெற்கையும் பிரித்த நிலையில், யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் எமக்குள் ஒற்றுமைப்படுதல் இல்லாமல் காணப்படுகிறது.

இதற்கு இந்தியா நல்ல உதாரணம். இந்தியா, பல இன, மொழி, மதங்கள் மக்களால் பின்பற்றப்படும் நாடாக உள்ள நிலையிலும், அவர்கள் 'இந்தியர்கள்' என்ற ரீதியில் ஒன்றுபட்டுவிடுவர்.

எமது நாடும் பல இன, மொழி, மதங்களை கொண்ட நாடாக காணப்படுகிற நிலையில் எமக்குள் 'இலங்கையர்' என்ற ரீதியில் ஒற்றுமைப்பட முடியாமல் உள்ளது.

அதற்கு கடந்த கால கசப்பான அனுபவங்கள், ஆட்சியாளர்களின் கடும் போக்கு, சிந்தனைகள் ஒன்றுபடும் தன்மையிலிருந்து நம்மை விலக்கி வைத்துள்ளன.

நான் ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில், வட மாகாணத்துக்கு 21 தடவைகள் வருகை தந்த ஜனாதிபதி நான்தான்.

ஏன் நான் அதிக தடவை வட மாகாணத்துக்கு வந்தேன் என்பதற்கு காரணம் இருக்கிறது. வடக்கையும் தெற்கையும் சமதளத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே ஆகும். 

வடக்கில் வாழும் மக்களின் அரசியல் அபிவிருத்தி, அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதன் மூலம் அனைவரும் 'இலங்கையர்' என்ற ரீதியில் சம அந்தஸ்துள்ளவர்களாக பயணிக்க வேண்டும் என விரும்பினேன். அதற்காக வடக்கு அபிவிருத்தி நிதியத்தை ஆரம்பித்து, அதனூடாக பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதிகளை ஒதுக்கினேன்.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்,  மயிலிட்டித் துறைமுகம் போன்ற அபிவிருத்திப் வேலைத்திட்டங்களை துரித கதியில் முன்னெடுத்தோம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு செல்ல முடியாமல் அகதி முகாம்களில் தங்கியிருந்தபோது, எனது ஆட்சிக் காலத்திலேயே சுமார் 2500 ஏக்கர் காணிகளை விடுவித்தேன்.

அதுமட்டுமல்லாமல், தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒரு புதிய அரசியல் அமைப்பின் தேவை கருதி, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஆரம்பித்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த பணிகளை நிறைவுசெய்ய முடியவில்லை.

நான் வடக்கு மக்களை மறக்கவில்லை.  அவர்களில் 80 வீதமானவர்கள் என்னை ஜனாதிபதி ஆக்குவதற்கு அர்ப்பணித்தவர்கள் என்பதை புத்திஜீவிகளான உங்கள் மத்தியில் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

புத்திஜீவிகளான உங்களிடம் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். எமது அயல் நாடான இந்தியாவிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில், 'இந்தியர்கள்' என்ற ரீதியில் அவர்கள் ஒன்றுபடுவதைப் போல நாமும் 'இலங்கையர்' என்ற ரீதியில் ஒன்றுபடுவோமாயின், பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்றார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்