cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

போர் நடந்த இடங்களில் புதைகுழிகள் இருக்கும்! - முல்லைத்தீவு மனிதப் புதைகுழி விடயத்தில் அரசு திமிர்த்தனம்

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ஆகியோர் தவிர்த்துள்ளனர்.

அத்துடன் "போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும்" என்று நீதி அமைச்சர் அலட்சியமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் கடந்த 29ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன. இது தொடர்பான மேலதிக அகழ்வுகள் எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தப் புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையில் - பங்கேற்புடன் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் வலியுறுத்தப்படுகின்றது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது.

ஜனாதிபதி ரணில்

"இந்த விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.  நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தப்பட்டுள்ளது இந்த விவகாரம். நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அடுத்தகட்டப் பணிகள் இடம்பெறும். இதைவிட மேலதிகமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை." - என்றார்.

நீதி அமைச்சர் விஜயதாஸ

"போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். அவற்றைத் தோண்டும் போது சடலங்களும் ஆயுதங்களும் மீட்கப்படும். முல்லைத்தீவு புதைகுழியிலிருந்து போரில் ஈடுபட்ட ஒருதரப்பின் சீருடைகள் மீட்கப்பட்டதாக அறிந்தேன். நீதிமன்றம் அந்தப் புதைகுழியை அகழ்வதற்கான உத்தரவையும் விடுத்துள்ளது. அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் இப்போது எல்லாம் பதிலளிக்கமுடியாது. அதேவேளை அந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கும் என்னால் பதில் கூற முடியாது." - என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்