அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கியிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தற்போது இலங்கையர்கள் பங்குபற்றும் சில கூட்டங்களில் கலந்துக்கொண்டு வருகிறார்.
கடந்த 22 ஆம் திகதி இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்ற அவர், நேற்றைய தினம் பேர்த் நகரில் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பு கருதி அவரது அவுஸ்திரேலியா பயணத்திற்காக இரண்டு விமான நிறுவனங்களில் பயணச்சீட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. அத்துடன் அவர் அங்கு தங்குவதற்காக இரண்டு ஹொட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளதுடன் தனியார் பாதுகாப்பு சேவையின் சேவையையும் பெற்றுக்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அவுஸ்திரேலிய கிளையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அனுரகுமார கலந்துக்கொள்ளும் கூட்டங்களுக்கு அவரை அழைத்துச் செல்வதற்காக கட்சியினர் அடங்கிய பாதுகாப்பு வலயத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனுரகுமார திஸாநாயக்க, இந்த விஜயத்தின் போது அவுஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.