அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள பாடசாலைகளில் தீபாவளி தினமானது விடுமுறை தினங்களின் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக அந்நகர மேயர் எரிக் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் மாநகர சபையில் நேற்று திங்கட்கிழமை(26) நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
நியூயோர்க் பாடசாலைகளில் தீபாவளியை விடுமுறைத் தினமாக பிரகடனப்படுத்துமாறு அங்குள்ள தெற்காசிய மற்றும் இந்தோ – கரீபியன் சமூகத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நியூயோர்க் மாநகர சபை உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் முன்வைத்த பிரேரணைக்கு அம்மாநகர சபை அங்கீகாரம் வழங்கியது.
நியூயோர்க் மாநிலத்தில் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 180 நாட்கள் பாடசாலைகள் இயங்க வேண்டியது அவசியமாகும். இந்நிலையில், இதுவரை நியூயோர்க் நகர பாடசாலைகளில் விடுமுறை தினமாக விளங்கிய புரூக்ளின் குயீன்ஸ் தினத்துக்கு பதிலாக. தீபாவளி தினம் விடுமுறை நாளாக சேர்க்கப்படவுள்ளது.
நியூ யோர்க் மாநில சட்டமன்றத்தின் கீழ் சபையிலும் செனட் சபையிலும் இதற்கான சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டது.
இச்சட்டமூலம் அமுலுக்கு வருவதற்கு அதில் மாநில ஆளுநர் கெத்தி ஹோசுல் அதில் கையெழுத்திட வேண்டும். எனினும், அவர் அதில் கையெழுத்திடுவார் என தான் எதிர்பார்ப்பதாக மேயர் அடம்ஸ் தெரிவித்தார்.
நியூயோர்க் செனட்டர் ஜோ அட்டாபோ (மத்தியில்), மேயர் எரிக் அடம்ஸ், ஜெனிபர் ராஜ்குமார்
நியூயோர்க் மாநில செனட் சபையில் இச்சட்டமூலத்தை முன்வைத்த செனட்டர் ஜோ அட்டாபோ கருத்துத் தெரிவிக்கையில், தனது சட்டமூலம் செனட் சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துடன் இது குறித்து தான் பெருமையடைவதாகவும் கூறினார்.
எவ்வாறெனினும், இவ்வருடம் தீபாவளி எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால், இவ்வருட பாடசாலை விடுமுறைத் திட்டத்தில் இச்சட்டமூலம் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டாது. அடுத்த வருடம் நியூயோர்க் பாடசாலைகளில் முதல் தடவையாக தீபாவளி விடுமுறைத் தினமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.