இலங்கையில் மனித புதைகுழிகள் அகழ்வு செய்யப்படும்போது அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்படவேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அரசாங்கத்திடமும் ஏனைய சர்வதேச நாடுகளிடமும் வலியுறுத்தியுள்ளனர்.
சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையம் ஆகிய 4 அமைப்புக்களும் ஒன்றிணைந்து 'இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப்பணிகளும்' என்ற தலைப்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
அவ்வறிக்கையில் செம்மணி, மாத்தளை, மன்னார், சூரியகந்த உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மனித புதைகுழிகள் குறித்தும் அவற்றை அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் தடைகள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக மாத்தளை மனிதப்புதைகுழி அகழ்வின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக் ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் அவ்வறிக்கையை மேற்கோள்காட்டி தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கங்களில் செய்திருக்கும் பதிவுகளிலேயே பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல் மூலம் தமது அன்பிற்குரியவர்களை தொலைத்த பல தமிழர்கள் பிரித்தானியாவில் வாழ்வதாக சுட்டிக்காட்டியிருக்கும் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக், "இலங்கையில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் முறையான ஆதார சேகரிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு நாம் சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர ஷர்மாவும் மேற்குறிப்பிட்டவாறான வலியுறுத்தலை செய்திருக்கின்றார்.
"இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடனான எமது ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றோம். இலங்கையில் மனிதப்புதைகுழி அகழ்வின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் அங்கு பிரசன்னமாவதை உறுதிப்படுத்துமாறு எமது அரசாங்கத்திடமும், ஏனைய சர்வதேச நாடுகளிடமும் கோருகின்றோம். உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உள்ளது " என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.