தமிழ் மக்களுக்கும், தமிழ் திரையுலக நட்சத்திர நடிகர்களுக்கும் எப்போதும் திரை தாண்டிய நட்பும், உறவும் உண்டு.
திரையுலக நட்சத்திரங்கள் என். எஸ். கிருஷ்ணன், எம்.ஆர். ராதா, பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம் ஜி ஆர், கலைஞர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய்... என தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் மேடைப் பேச்சுக்கள்.. அவர்களது ரசிகர்களை மட்டும் கவர்வதில்லை. அவர்களைக் கடந்து அரசியல், இலக்கியம், சமூகம்.. என பல துறை அறிஞர்களையும் கவரும். இவர்களின் பேச்சுகள்... இவர்கள் திரையில் பேசும் வசனங்கள்.. இரண்டும் காண்போரையும், கேட்போரையும் கரவொலி எழுப்பி பரவசப்படுத்தும்.
ஆனால் விமர்சகர்கள்.. திரை நட்சத்திரங்களின் மேடைப்பேச்சு குறித்தும், திரையில் அவர்கள் பேசும் வசனங்கள் குறித்தும், எப்போதும் எதிர் நிலையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்திருக்கிறார்கள்.
தற்போது கூட.. தளபதி விஜய் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலிருந்து 'ஓ' லெவல், மற்றும் 'ஏ' லெவல் வகுப்புகளில் படித்து அதிக அளவில் பெருபேறு பெற்று சித்தி அடைந்த மாணவர்களில் முதல் மூன்று இடங்களில் தேர்வானவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு ரொக்க தொகையும், சான்றிதழும் வழங்கி கௌரவப்படுத்தி இருக்கிறார்.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் தளபதி விஜய் பங்குபற்றி சிறப்புரையாற்றினார். இதன் போது அவர் பேசிய பேச்சுக்கள்.. சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. காட்சி ஊடகங்களில் விவாத பொருளாகவும் மாற்றம் பெற்றது.
நட்சத்திர நடிகர் ஒருவரின் மேடைப்பேச்சை தமிழ் சமூகம் விவாத பொருளாக மாற்றம் பெற்றது குறித்து தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் இடையே பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், விஜய் பேசிய பேச்சுக்கள்.. சமூகத்தில் குறிப்பாக தேர்தல் அரசியலில் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் விடயம் குறித்து தன் மனதில் பட்ட எண்ணத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதனை சில அரசியல்வாதிகள் வரவேற்றும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், சிலர் மௌனம் காத்தும் தங்களின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
சிலர் விஜயின் செயல்களுக்கு பின்னால் அவரின் அரசியல் பிரவேசம் இருக்கிறது என்று ஒரு காரணத்தை கண்டுபிடித்து பேசுகிறார்கள்.
வேறு சிலர் விஜய் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தாலும், அதில் அவருடைய விஜய் மக்கள் இயக்கத்தினர் நேர்மையாக மாணவ மாணவிகளை தெரிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள். வேறு சிலர் இத்தகைய நிகழ்ச்சிக்கு விஜய் 3 கோடி ரூபாய் செலவு செய்திருக்கலாம் என்றும், இவரும் தன்னுடைய ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவிப்பதற்கு 3 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறாரே..! என்றும் குறிப்பிடுகிறார்கள்.
வேறு சிலர் அவருடைய நடிப்பில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் 'லியோ' படத்தினை விளம்பரப்படுத்தும் நோக்கில் இத்தகைய நிகழ்வை முன்னெடுத்திருப்பதாகவும், அவருடைய பிறந்தநாள் இந்த மாதம் வருவதால் அதற்கான முதற்கட்ட விளம்பர உத்தியாக இந்நிகழ்வு இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பொதுவாகவே ஒருவர் மீது நேர் நிலையாகவோ அல்லது எதிர் நிலையாகவோ விமர்சனம் முன் வைக்கப்படுகிறது என்றால், அவர் விரைவாக வளர்ச்சி அடைந்து.. முன்னேறி வருகிறார் என்பது பொருள். அந்த வகையில் விஜய், மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வில் பேசிய பேச்சுக்கள் தமிழகம் மட்டுமல்லாமல் உலக தமிழர்களிடையே பேசு பொருளாகவும்.. விவாத பொருளாகவும் மாற்றமடைந்து, பாரிய அதிர்வை உண்டாக்கி இருக்கிறது என்பது மட்டும் உறுதி.