மலேசியாவின் ‘அன்னை தெரசா’ என அழைக்கப்படும் ‘மதர் மங்களம்’ உடல்நலக் குறைவால் தனது 97ஆவது வயதில் காலமானார்.
மலேசியாவின் புச்சோங்கில் 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பியோர் லைஃப் சொசைட்டி’ என்ற ஆதரவற்ற மற்றும் ஆதரவற்றோருக்கான சமூக சேவை அமைப்பின் வாழ்நாள் தலைவராக இருந்தவர் ஏ.மங்களம்.
மேலும் இவர், மலேசியா மதங்களுக்கு இடையிலான அமைப்பின் துணைத் தலைவராகவும், வளர்ச்சியில் பெண்களை ஒருங்கிணைப்பதற்கான தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இவர், தனது மனிதாபிமான பணிகளுக்காக ‘மலேசியாவின் அன்னை தெரசா’ என்று அழைக்கப்பட்டார்.
இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு மூச்சுக்குழாய் நிமோனியாவுக்காக அசுண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 3.52 மணிக்கு காலமானார். அவரது இறுதிச் சடங்கு, புச்சோங்கில் உள்ள ‘பியோர் லைஃப் சொசைட்டி’யில் நேற்று (11) நடைபெற்றது.