90ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பத்திற்குரிய ஷோவான சக்திமான், தற்பொழுது இருக்கும் அவெஞ்சர்ஸ், பேட்மேன், சூப்பர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் அமெரிக்காவில் இருந்து உலகத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் இருந்து கொண்டு உலகத்தை காப்பாற்றியது.
சக்திமான் மந்திரம் போல் உச்சரிக்கும் பெயராகவும் மாற்றமடைந்திருந்தது. காலப்போக்கில் அனைத்தும் மாற்றமடைய 1997 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான சக்திமான் தொடர் 2005 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
கொரோனா பெருந்தொற்றின் போது ஊரடங்கு நேரத்தில் கூட சக்திமான் தொடரை மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தமையால் இந்த தொடருக்கு இப்போதும் வரவேற்பு உள்ளது என்பதை உணர்ந்த சக்திமான் கதாநாயகனான முகேஷ் கண்ணாவும் இந்த தொடரை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சக்திமான் கதையை திரைப்படமாக உருவாக்கப் போவதாக சக்திமான் குழுவினரும் அறிவித்துள்ளதுடன் அதற்காக கதை, நடிகர் என தொடர்ந்தும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆயினும், இந்த படத்தை இயக்கப் போவது யார் என்றோ? அல்லது நடிக்க போவது யார் என்றோ? அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை முகேஷ் கண்ணா முற்றிலும் மறுத்துள்ளார். மேலும் இந்த படத்தில் முன்னதாக தானும் ஒரு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், தான் இல்லாமல் இந்த படம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளதுடன், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் கூட தான் நடிக்கவில்லை என்றும் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமீபத்தில் பேட்டியளித்த அவர், சக்திமான் படம் 200-300 கோடி என பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த படத்திற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்திடப்பட்டுள்ளது. எந்த ஒரு ஒப்பீடும் வேண்டாம் என்பதால் இந்த படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் கூட நடிக்க மாட்டேன். சோனி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அப்டேட்கள், நடிகர்கள், இயக்குநர் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சக்திமான் திரைப்படத்தை 'மின்னல் முரளி' படத்தை இயக்கிய இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு இந்த படத்தை இயக்க ஒரு இந்து அல்லாத இயக்குநருக்கு கொடுக்க விருப்பவில்லை என்றும் சக்திமான் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளதாகவும் ஒரு செய்தி பரவியமையால் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.