cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து; 20 ஆண்டுகளுக்கு முன்பு கமலின் ‘அன்பே சிவம்’ படத்தில் இதே காட்சி

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பே கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் இதேபோன்று ரயில் விபத்து ஏற்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓடிசாவில் 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர ரயில் விபத்து, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றொரு லைனில் வந்த சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. சிறிது நேரத்தில் அடுத்து ஹவுரா ரயிலும் இவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 275 பேர் பலியான நிலையில், 900-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பலியாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு தண்டவாளத்தை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. சிக்னல்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், இந்த விபத்து குறித்த சில முக்கிய தகவல்களை சேகரித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி நெட்டிசன்கள் பதிவிட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதன்படி, இந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிலீஸ் ஆன கமலின் அன்பே சிவம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டது தான் வைரலாகி வருகிறது. அந்த படத்திலும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு கோர விபத்தில் சிக்குவது போன்று காட்சிப்படுத்தி இருப்பார்கள். தற்போது நிஜத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியுள்ளதால், இரண்டையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் தற்போது இந்த ரயில் விபத்தில் சிக்கிய ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அதிகளவில் ரத்தம் தேவைப்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்து ரத்த தானம் செய்தனர். இந்த சம்பவமும், அன்பே சிவம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இதுகுறித்த வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்