வெள்ளை மாளிகையின் பாதுகாப்புத் தடைகள் மீது மோதிய லொறியின் சாரதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வொஷிங்டன் டிசி நகரிலுள்ள வெள்ளை மாளிகையின் பாதுகாப்புத் தடைகள் மீது உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு ட்ரக் வண்டியொன்று மோதியது.
இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாகனத்தை பொலிஸார் ஆராய்ந்தபோது, ஹிட்லர் தலைமையிலான நாஸிகளின் சுவஸ்திகா பதாகையொன்று அதில் காணப்பட்டது,
இம்மோதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாகனத்தின் சாரதியான 19 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்ய முயன்றார் என அந்த இளைஞன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 19 வயதான சாய் வர்சாத் கந்துலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மிசோரி மாநிலத்தின் செஸ்ட்டர்பீல்ட் நகரை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிசோரி மாநிலத்தின் செயின்ற் லூயிஸ் நகரிலிருந்து ஒரு வழி டிக்கெட்டுடன் அவர் விமானத்;தில் பயணித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தான் ஒரு நாஸி அபிமானி என சாய் வர்சாத் கந்துலா ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி லொறியை வேர்ஜீனியா மாநிலத்தின் ஹேர்ன்டோன் நகரில் வாடகைக்கு அவர் பெற்றுள்ளார்.
அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டை பொறுப்பேற்பதற்காக வெள்ளை மாளிகைக்கு தான் செல்ல முற்பட்டதாகவும், இரகசிய சேவைப் பிரிவினரிடம் கந்துலா தெரிவித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேவையானால் ஜனாதிபதியை தான் கொல்லவும் கூடும் அவர் கூறினார் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஜனாதிபதி பைடனுக்கு செவ்வாய் காலை தெரிவிக்கப்பட்டது என வெள்ளை மாளிகை பேச்சாளர் கரீன் ஜீன் பியரி தெரிவித்துள்ளார்.