இரவை பகலாக்கும் வண்ண விளக்குகள், வானளாவிய கட்டிடங்கள், சுறுசுறுப்பாக இயங்கும் மனிதர்கள் என அழகுற காட்சியளிக்கும் நகரம் நியூயார்க். ஸ்பைடர் மேன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நியூயார்க் நகரத்தில் எடுக்கப்பட்டதை வைத்து அங்குள்ள கட்டிடங்களின் உயரத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். நியூயார்க் நகர வீதிகளில் நடந்தபடி நடிகர் சூர்யா பாடும் இந்த பாடல் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று.
ஆனால், வெளியாகி இருக்கும் ஆய்வு முடிவை வைத்து பார்த்தால் நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் என்பதற்கு பதிலாக நியூ யார்க் நகரம் மூழ்கும் நேரம் என்று மாற்றி பாட வேண்டியிருக்கும் போல…. ஆம், உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டிடங்களின் அழுத்தம் காரணமாக நியூயார்க் நகரம் மூழ்கி வருவதாக கூறப்படுகிறது. கால நிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் உலகம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவது நாம் அறிந்ததே.
அதில் சென்னை மாநகரத்தின் பெயரும் இடம்பெற்றிருப்பதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். ஆனால், கட்டிடங்களின் எடை காரணமாக நியூயார்க் நகரம் மூழ்கும் செய்தி புதிதாகவும், முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. நியூயார்க்கின் மக்கள் தொகை 84 லட்சம் என்ற அளவில் இருக்கும் நிலையில், அங்குள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களின் எடை 1.7 டிரில்லியன் பவுண்ட் ஆகும்.
இதனால் அந்நகரம் ஆண்டுக்கு 1 முதல் 2 மிமீ அளவு மூழ்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அளவு கேட்பதற்கு சிறியதாக தோன்றினாலும் அதன் தாக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் LOWER MANHATTAN, BROOKLYN, QUEENS போன்ற பகுதிகள் அதிவேகமாக மூழ்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஏற்கனவே கடலோர வெள்ள அபாயத்தை எதிர்கொள்வதில் உலகளவில் 3வது இடத்தில் இருக்கும் நியூயார்க் நகரம், அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் மற்ற பகுதிகளை காட்டிலும் 3 முதல் 4 மடங்கு கடல் மட்ட உயர்வு பிரச்சனையை அதிகம் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் வானளாவிய கட்டிடத்தின் அழுத்தம் காரணமாக ஏற்படும் இந்த மாற்றம் அந்நகரவாசிகளுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, உலகில் உள்ள மற்ற கடற்கரையோர நகரங்களும் இந்த விசயத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.